லொறியொன்றின் மீது அதி உயரழுத்தம் கொண்ட மின் கம்பி விழுந்ததில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் மாத்தளை, மஹவெல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் ஒன்றின் கிளை முறிந்து குறித்த அதி உயரழுத்தம் கொண்ட மின்கம்பி மீது விழுந்ததிலேயே குறித்த சம்பம் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை - மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவுள்பத்த -ஹதமுணாகல பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது இன்று முற்பகல் 10. 45 மணியளவில் அதிக மின்வலுக்கொண்ட மின்கம்பி (33 ஆயிரம் வோல்ட் வலு) அறுந்து வீழ்ததால் மின்சாரம் தாக்கி குறித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் செலகம, மஹவெல ஆகிய பகுதியைச் 23 மற்றும் 27 வயதுடையவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது லொறியில் மூன்று பேர் இருந்துள்ளதுடன் அவர்களுள் ஒருவர் லொறியிலிருந்து வெளியே பாய்ந்து  தப்பிக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.