சூர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சூரரைப்போற்று’ என்ற படம் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தில்நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். 

இவருடன் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி, மூத்த நடிகை ஊர்வசி, கருணாஸ், பொலிவுட் நடிகர்கள் பரேஷ் ரவால், ஜேக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, நடிகர் விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். 

இறுதிச்சுற்று என்ற படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

“சூரரைப்போற்று திரைப்படம் பட மாளிகையில் தான் முதலில் வெளியாகும். பட மாளிகையில் திரைப்படத்தை பார்க்கும் அனுபவம் போல் வேறு எதிலும் கிடைக்காது. அதனால் எம்முடைய தயாரிப்பில் உருவாக்கியிருக்கும் சூரரைப்போற்று என்ற திரைப்படம், படமாளிகையில் வெளியான பிறகுதான் டிஜிற்றல் தளத்தில் வெளியாகும்.” என்றார் சூர்யா. 

இந்நிலையில் இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யூ’ என்ற சான்றிதழை பெற்றிருக்கிறது. இதனால் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை கூடுதல் விலைக்கு விற்பனையாகும் என்கிறார்கள் திரையுலக வணிகர்கள்.