(ஆர்.ராம்)

போரை நிறைவுக்கு கொண்டுவந்தது போன்று துப்பாக்கி மூலம் அனைத்தையும் நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்ற அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது, ஜனாதிபதி கோத்தாபய தேசிய வீரர்கள் தினத்தில் ஆற்றிய உரையின்போது சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தால் சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேற தயங்கப்போவதில்லை என்று கூறியமையை எவ்வாறு பார்கின்றீர்கள் என்று வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் அவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டினுள் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் அழுத்தங்களை அளித்தால் அவற்றுக்கான தீர்வுகளை காணமுயல வேண்டும். அவற்றை ஒழித்துமறைப்பதால் பயனில்லை. நடைபெறாத விடயங்களை கூறினால் ஜனாதிபதி கூறும் நிலைப்பாட்டில் இருப்பதில் தவறில்லை.

உதாரணமாக, சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி அளிக்க வேண்டுமாயின் நிபந்தனைகளை விதித்து அவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரினால் அதுதவறாகவே அமையும்.

அதேநேரம் நாட்டின் முன்னேற்றத்திற்கான நிபந்தனைகளாக இருந்தால் அவற்றை புறக்கணிக்கவும் முடியாது. ஆகவே இந்த இரண்டு நிலைப்பாடுக்கும் மத்தியில் தான் தீர்மானங்கள் உள்ளன.

இலங்கையை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாக கூறப்பட்டபோதும் கடந்த ஐந்து வருடங்களில் எதுவுமே நடைபெற்றிருக்கவில்லை. சர்வதேசத்துடன் இணைந்தே பயணிக்க வேண்டும். தனித்து செயற்படுவதால் எதனையும் செய்ய முயாது. போரை நிறைவுக்க கொண்டுவந்தது போன்று துப்பாக்கி மூலம் அனைத்தையும் நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்ற அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.