(நெவில் அன்தனி)

கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகிவற்றுக்கான இணை தகுதிகாண் (இரண்டாம்  சுற்று கால்பந்தாட்டப் போட்டிகள் அக்டோபர் மாதத்திலிருந்து மீண்டும் தொடரவுள்ளது.

இந்தத் தகவலை ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனம் (ஏ.எவ்.சி.) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.

இதற்கு அமைய இலங்கை அணி தனது எஞ்சிய இரண்டாம் சுற்று தகுதிகாண் போட்டிகளில் எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில்   விளையாடவுள்ளது.

வட கொரியாவுக்கு எதிரான போட்டி பியொங்யெங் விளையாட்டரங்கில் அக்டோபர் 08 ஆம் திகதியும் தென் கொரியாவுக்கு எதிரான போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் அக்டோபர் 13 ஆம் திகதியும் லெபனானுக்கு எதிரான போட்டி நவம்பர் 12 ஆம் திகதியும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

முதல் சுற்றில் துர்க்மேனிஸ்தான் (0-2), வட கொரியா (0-1), தென் கொரியா (0-8), லெபனான் (0-3) ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த இலங்கை இரண்டாம் சுற்றில் துர்க்மேனிஸ்தானிடம் (0-2) தோல்வி அடைந்தது.

இதேவேளை, தேசிய வீரர்கள் 18 பேருக்கான பயிற்சிகள் பெத்தகானவில் திட்டமிட்டபடி எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.