இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையின் அன்பரும் அற்புதமான நிருவாகியுமான அபே என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜி.ஏ.கே. அபேசேகர இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலமானார்.

இலங்கை கால்பந்தாட்டத் துறையில் வீரராக, நிருவாகியாக அரை நூற்றாண்டுக்குமேல் வலம்வந்த அபேசேகர, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் பொதுச் செயலாளர், உதவித் தலைவர், போட்டி திட்டமிடல் மற்றும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர், பயிற்சித் திட்டப் பணிப்பாளர் என பல பதவிகளை வகித்தவராவார்.

முன்னாள் கால்பந்தாட்ட வீரராக (கோல்காப்பாளர்) இவர் பல வருடங்கள் விளையாடியதுடன் சிறைச்சாலைகள் அணியை உயர்நிலைக்கு இட்டுச் சென்ற பெருமைக்கும் உரியவர்.

கொழும்பு கால்பந்தாட்ட லீக்கிலும் பல்லாண்டுகள் செவையாற்றிய அவர் 1960 களின் பிற்பகுதியில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாக சபையில் இணைந்தார்.

இலங்கையில் அதி சிறந்த கால்பந்தாட்டப் போட்டி ஏற்பாட்டாளராக செயற்பட்டவர் அபேசேகர ஆவார்.

அவரது காலத்தில் வருடம் முழுவதும் ஏதாவது ஒரு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி நடந்துகொண்டே இருப்பதுடன் அதுவே இலங்கையில் அதி சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் உருவாவதற்கும் வழிவகுத்தது.

கால்பந்தாட்ட விளையாட்டுத்துறைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த அபேசேகரவின் நேர்மையான சேவை அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி என்று கூறினால் மிகையாகாது.

அன்னாரின் பூதவுடல் ஜயரட்ன மலர்ச்சாலையில் சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மாலை 5.00 மணியளவில் பொரளை கனத்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.