(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையை சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நிறுவவேண்டும். நீதிப் பொறிமுறையானது நம்பகரமானதாவும் சுயாதீனமாகவும் பக்கசார்பற்ற முறையிலும் இருக்க வேண்டுமாயின் சர்வதேச பங்களிப்பு இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்றையதினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் பிரதிநிதி மேற்கொண்டவாறு கூறினார். 

சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழுவின் பிரதிநிதி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

ஜெனிவா பிரேரணையை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை வரவேற்கிறோம். குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அமைத்தலை குறிப்பிடலாம். எனினும் பிரேரணை விடயத்தில் இன்னும் அமுல்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் அதிகம் காணப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். 

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையை தாமதமின்றி நிறுவுமாறு கோரிக்கை விடுக்கிறோம். இதேவேளை இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையை சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நிறுவவேண்டும். நீதிப் பொறிமுறையானது நம்பகரமானதாவும் சுயாதீனமாகவும் பக்கசார்பற்ற முறையிலும் இருக்க வேண்டுமாயின் சர்வதேச பங்களிப்பு இடம்பெற வேண்டும் என்றார். 

பிரிட்டன்

இந்த அமர்வில் பிரிட்டனின் பிரதிநிதி உரையாற்றுகையில்,

கடந்த காலம் தொடர்பில் பரந்துபட்ட ரீதியில் அணுகுதல், நம்பிக்கையை ஏற்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்வை வழங்குதல் ஆகியன மிக முக்கியமானதாகும். இலங்கை முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஐ.நா.வுடனான இலங்கையின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. விசேட அறிக்கையாளர்களை இலங்கை அந்நாட்டுக்கு அழைத்துள்ளது. காணமால்போனோர் பற்றிய அலுவலகத்தை அமைக்க சட்ட வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறெனினும் இன்னும் இலங்கையில் அதிக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், நம்பகரமான நீதிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றார். 

ஜேர்மன்

ஜேர்மன் நாட்டு பிரதிநிதி உரையாற்றுகையில், 

இலங்கை ஏற்படுத்தியுள்ள முன்னேற்றங்களை ஜேர்மன் வரவேற்கின்றது. இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பை பரந்துப்பட்ட அணுகுமுறையுடன் வரைந்து வருகின்றது. காணாமல்போனோர் அலுவலகம் நியமிக்கப்படவுள்ளது, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் இலங்கை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது, எஞ்சியுள்ள செயற்பாடுகளை குறிப்பாக உண்மையை கண்டறிதல், நீதி வழங்குதல், நல்லிணக்கத்தை முன்னெடுத்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் போன்றவற்றை விரைவாக முன்னெடுக்குமாறு இலங்கையை ஊக்குவிக்கின்றோம். அனைத்து பக்கத்திலும் பாதிக்கப்பட்டோர் நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கின்றனர். ஜேர்மன் உதவிகளை வழங்க  தயாராக இருக்கின்றது என்றார்.