முன்னணி இயக்குநர் ஏ. ஆர் .முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மடோனா செபாஸ்டின் தெரிவாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. 

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் பிரபல நடிகையான இவர், அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘கவண்’, தனுஷ் இயக்கி நடித்த ‘ப.பாண்டி’, விஜய் சேதுபதி நடித்த ‘ஜூங்கா’, விக்ரம் பிரபு நடித்த ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தெரிவாகியிருக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கி, கத்தி, சர்க்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், தளபதி விஜயுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தின் பணிகள் மே மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி இருப்பதாகவும், நடிகை மடோனா செபாஸ்டியன் தளபதி விஜய்யுடன் இணைவது இது தான் முதல் முறை என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.