கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துச்செல் இரு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதற்காக முன்னொருபோதும் இல்லாதவாறான பாரிய மீட்பு நடவடிக்கை ஒன்றினை “வந்தே பாரத்” என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், இலங்கையில் சிக்கியுள்ள இந்திய பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்துச்செல்வதற்கான மூன்றாவது கட்டமாக மேலும் இரு விமானங்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் மாதம் 15 ஆம் திகதி AI 1202 என்ற விசேட விமானம் கொழும்பிலிருந்து  பெங்களூருக்கு புறப்படவுள்ளது. மற்றும் ஜூன் மாதம்  22 ஆம் திகதி AI 0282 என்ற மற்றுமொரு விசேட விமானம் கொழும்பிலிருந்து டில்லி – லக்னோ - காயா ஆகிய இடங்களுக்கு புறப்படவுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானங்களுக்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் மே 5ஆம் திகதி வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டு முறைமையின் பிரகாரம், அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு, இப்பயணத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த விமான சேவைகள் தொடர்பான விபரங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களை மாத்திரமே குறித்த விமானத்தில் அனுமதிக்க முடியும்.

இந்நிலையில் பயணத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இ மெயில் மூலமாக அறிவித்தல்கள் அனுப்பப்படும்.

இந்த விமான பயணத்துக்கான கட்டணம் பயணிகளால் செலுத்தப்படவேண்டும். 

தனிமைப்படுத்தல் வசதிகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டு முறைமை குறித்த தகவல்கள் மாநில மற்றும் UT (யூனியன்/ டெரிடோரிட்டி) அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த தகவல்களும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள். https://hcicolombo.gov.in/COVID_helpline 

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் பொறுமையைப்பேணுமாறும், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 

https://www.mha.gov.in/sites/default/files/MHAOrderDt24052020forspecifiedpersonstotravelabroad.pdf