கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிய ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா பணிப்புரை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அமைச்சின் கீழான திணைக்களத் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சிலருக்கு, உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படாமையால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என, செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்களது சுயவிவரக் கோவையிலுள்ள குறைபாடுகளே இதற்குக் காரணம் என்பதையும் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அடுத்து வரும் 5 வருடங்களுக்குள் ஓய்வு பெறவுள்ள சகல ஆசிரியர்களினதும் சுயவிவரக் கோவைகளை ஒழுங்குபடுத்துமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு, செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.