ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டவை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கடத்தலை தடுக்க முன்னைய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, எடுத்த நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை. இதன் காரணமாகவே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறுகின்றது. 

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பந்துல குணவர்த்தன, இந்த நாட்டில் கப்பம் பெற்று மக்களை அச்சுறுத்தி அப்பாவி மக்களின் செயற்பாடுகளில் தலையிடும் நபர்களின் தொல்லையிலிருந்து சகல மக்களையும் பாதுகாப்பதே இந்த செயல் அணியின் பிரதான நோக்கம் என்று கூறியுள்ளார்.

அப்பாவி பொதுமகன் ஒருவர் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டால் அதனை பொலிசார் கவனத்தில் கொள்ளாத பட்சத்தில், அடுத்த கட்டமாக அதனை பொலிசாருக்கு மேல் அதிகாரத்துக்குக்கொண்டு செல்லும் வகையில் இந்த செயலணி துணையாக இருக்கும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க அரசாங்கம் படிப்படியாக இராணுவ ஆட்சிக்கு வித்திட்டுள்ளது என்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருக்கிறார். சுயாதீனமாக இயங்கி வரும் அரச துறையை இராணுவத்தின் தலைமையகத்தின் கீழ் அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. என்று குற்றம் சாட்டும் அவர், அரசாங்கம் படிப்படியாக இராணுவ ஆட்சிக்கு வித்திடுகின்றது என்று கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் படி அரச சேவையானது சுயாதீனமாக இயங்கவேண்டிய துறையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், இராணுவ தளபதி உள்ளிட்ட 13 இராணுவத்தினரைக் கொண்ட ஜனாதிபதி செயலணியின் ஆணைக்கமைய அரசதுறை இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான திட்டங்களில் ஒன்றாகவே இதனைக் கருதமுடிகின்றது. அரச துறையினர் என்றுமே இராணுவத்தினரையும் விட உயர்மட்டத்தில் வைத்துப் பார்க்கப்பட்டு வருபவர்கள். இவர்களை இன்று இராணுவத்தினரின் ஆணைக்கு அமைவாக செயற்படுமாறு இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வர்த்தமானியின் பிரகாரம் அரச துறையினர் போதைப்பொருள் சோதனைகள் மற்றும் சிறைச்சாலை செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது, அரசாங்கத்தின் கடமை. அதேவேளை, மக்களின் நியாயமான சந்தேகங்களையும் களையவேண்டும். ஏற்கனவே, அரசாங்கம் இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது. 

அதற்குப் பிரதான காரணம், பல்வேறு அரச அதிகாரிகள் வகிக்க வேண்டிய பொறுப்புக்களில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் அமர்த்தப்பட்டுள்ளமையாகும். இது நாட்டின் ஜனநாயகத்துக்கு பாரிய சவாலாக இருக்கும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.