(இராஜதுரை ஹஷான்)

2020 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் "இயற்கைக்கானதொரு காலம் " என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.

ஏனைய வருடங்களை காட்டிலும் இவ்வருடம் சுற்றாடல் பாதுகாப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளன. சுற்றாடல் வளங்களை பாதுகாப்பது அனைவரது பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1972 ஆம் ஆண்டு சுவீடன் - ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற சுற்றாடல் மாநாட்டின் தீர்மானத்திற்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்டத்துக்கு அமைய ஒவ்வொரு வருடமும் ஜூன்  மாதம் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகிறது.

இதற்கமைய 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றாடல் தினம்   கொண்டாடப்பட்டது. இதுவரையில் 47 முறை உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு உலக சுற்றாடல் தினம் "இயற்கைக்கானதொரு காலம்" என்ற தொனிப்பொருளுக்கு அமைய கொண்டாடப்படவுள்ளது.

சுற்றாடல் வளங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நிலைபேண் அபிவிருத்திகளில் பிரதானமாக காணப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் மத்தியில் உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகிறது.  சுற்றாடல் அழிவுக்கு மனித செயற்பாடுகள் பிரதான காரணியாக உள்ளன. இயற்கை அழிவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழு உலகமும் தற்போது கவனம் செலுத்தியுள்ளன.

இவ்வருடம் பாரிய சவால்களை வெற்றிக் கொள்ளும் விதமாக உள்ளது. கடல்வள மாசடைவு, புவி வெப்பமாதல்,காடழிப்பு, வாயு மாசடைவு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

உலகில் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுத்தமான சுற்றாடல் சூழலை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளார்ரகள். இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளின் விளைவினை மனிதன் அனுபவித்தாக வேண்டும்.

இதன் பிரதிபலனை இன்று அனைவரும் அனுபவிக்கிறோம். சுற்றாடல் வளங்களை பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.