(எம்.எப்.எம்.பஸீர்)

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியான மொஹம்மட் நஸார் மொஹம்மட் அசாத், கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு செல்ல, கொச்சிக்கடை தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்திய அலாவுதீன் அஹமட் முஆதே பஸ் வண்டியில் ஆசன  பதிவினை செய்து கொடுத்துள்ளதாக, சீயோன் தேவாலய தாக்குதல் குறித்த விசாரணைக்கு பொறுப்பான சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க சாட்சியமளித்தார்.  

நேற்றைய தினம் முற்பகல் 408 ஆவது சாட்சியாளராக அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில், அரச சட்டவாதியின் நெறிப்படுத்தலில் இந்த சாட்சியத்தை வழங்கினார்.  

தாக்குதலுக்கு முன்னர், 2019 ஏபரல் 19 ஆம் திகதி அதிகாலை வேளை, கல்முனையில் இருந்து தனது மனைவி பாத்திமா பெரோசாவுடன்  வாடகை வேனில்  மொஹம்மட்  நஸார் மொஹம்மட் அசாத் கொழும்புக்கு வந்துள்ளதாகவும், கொள்ளுப்பிட்டி - லகீ பிளாஸாவில் இருந்த பயங்கரவாதிகளின் பாதுகாப்பு இல்லத்துக்கே  அவர் வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்ததாக  பிரதான விசாரணை அதிகாரி சமன் வீரசிங்க கூறினார்.

கொள்ளுப்பிட்டி லகீ பிளாஸா பாதுகாப்பு இல்லத்துக்கு மொஹம்மட் அசாத் வரும் போதும், அங்கு  பயங்கரவாதி சஹ்ரான், அவரது பிள்ளைகளும், நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலய தற்கொலை குண்டுதாரியானா  மொஹம்மட் ஹஸ்தூன் அவரது மனைவி சார ஜஸ்மின் அல்லது புலஸ்தினி ஆகியோர் அங்கு இருந்துள்ளதாகவும், பின்னர் அவர்கள் அனைவரும்  அசாத் சென்ற வேனில் பாணந்துறை பாதுகாப்பு இல்லத்துக்கு சென்றுள்ளதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க சாட்சியமளித்தார். 

பாணந்துறையில், சஹ்ரானும், ஹஸ்தூனும், அசாத்தும் இறங்கியுள்ளதாகவும், அவர்களது மனைவிமாருடன், சஹ்ரானின் சகோதரனான ரில்வான் அந்த வேனில் ஏறி சாய்ந்தமருது நோக்கி சென்றுள்ளதாகவும் அவர் சாட்சியமளித்தார். 

அதன்படியும் தொலைபேசி தொடர்புகளின் பிரகாரமும் பார்க்கும் போது இந்த அனைத்து தாக்குதல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என்ற நிலைப்பாட்டுக்கு வரக் கூடியதாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் நேற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக்க டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது சி.ஐ.டி.யின்  வணிக விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும், சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை அதிகாரியுமான பிரதான பொலிஸ் பரிசோதகர்  சட்டத்தரணி சமன் வீரசிங்க சாட்சியமளித்தார்.

சி.சி.ரி.வி. ஆதாரங்களையும், தொலைபேசி விபரப் பட்டியல், கோபுர தகவல்களையும் முன்வைத்து அவர் இந்த சாட்சியத்தை வழங்கினார்.

 அந்த சாட்சியத்தின் சுக்கம் வருமாறு,

'  1996 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த நான்,  1997 ஆம் ஆண்டு முதல் சி.ஐ.டி.யில் கடமையாற்றுகின்றேன்.  கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தொடர் குண்டுத் தாக்குதல்களின்  பின்னர், 2019 ஏப்ரல் 23 ஆம் திகதி சீயோன் தேவாலயம் தொடர்பிலான  விசாரணைகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை அப்போதைய சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர என்னிடம் ஒப்படைத்தார். 

அதன்படி அன்றைய தினம் நானும்  பொலிஸ் பரிசோதகர் பஸீரும் கான்ஸ்டபிள் சில்வாவும் மட்டக்களப்பு சென்றோம். அப்போதும் மட்டக்களப்புக்கு எமது சி.ஐ.டி. குழுவொன்று சென்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. மட்டக்களப்பு பொலிசாரும்   நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

  நாம் மட்டக்களப்பு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கும் போதும் தற்கொலை குண்டுதாரி யார் என உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.  நான் சென்றதும் விசாரணைக் குழுவை 3 ஆக பிரித்தோம்.  சி.சி.ரி.வி காட்சிகளை கண்டறிந்து சேகரிக்க ஒரு குழுவையும்,  தொலைபேசி தரவுகளை சேகரிக்க ஒரு குழுவையும்,  பிரதேசத்தில் நடமாடி தகவல் சேகரிக்க ஒரு குழுவையும் கடமையில் ஈடுபடுத்தினேன்.

 சீயோன் தேவாலய குண்டுதாரியின் படம் அல்லது உருவத்தை, சீயோன் தேவாலயத்துக்கு செல்லும் வழியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. காணொளியில் இருந்தே  எம்மால் முதலில் பெறக் கூடியதாக இருந்தது.

 அதிலிருந்து ஆரம்பித்த விசாரணைகளில்  பல சி.சி.ரி.வி  காணொளிகள் ஊடாக உறுதியான   முடிவுகளுக்கு வரக் கூடியதாக இருந்தது.

 சீயோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பின் பின்னர்  ஸ்தல பரிசோதகர்களால் ஒரு தொலைபேசியின்  பாகம் கண்டறியப்பட்டது. அந்த பாகத்தை வைத்து தொலைபேசியின் இமி இலக்கத்தை கண்டறிந்து, அதில் பயன்படுத்தப்பட்ட சிம் அட்டை இலக்கத்தையும் கண்டுபிடித்தோம். அதனை ஆராயும் போது அது தற்கொலை குண்டுதாரியான அசாத்தின் தொலைபேசி என தெரியவந்தது.

 அந்த  அழைப்பை பரிசீலித்த போது, அவருக்கும் கொச்சிக்கடை தேவாலய  தர்கொலை குண்டுதாரியான  முஆதுக்கும் இடையிலான தொடர்புகுறித்து தெரியவந்தது. அதன்படி முன்னெடுத்த விசாரணைகளில், கொச்சிக்கடை  தற்கொலை குண்டுதாரி முஆத்தே, சீயோன்  தேவாலய குண்டுதாரிக்கு  கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வர, கல்முனை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் வசிக்கும் இரு பஸ் ஆசன பதிவு செய்யும் நபர்கள் ஊடாக ஆசனம் ஒதுக்கீடு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அந்த ஆசன ஒதுக்கீடு செய்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்களுக்கும் முஆதுக்கும்  நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக தெரியவராத போதும்,  முஆத் கிழக்குக்கு சென்றுவர  கல்முனையில் உள்ள பஸ் ஆசன பதிவாளர் ஊடாகவே ஆசனங்களை முன் பதிவு செய்து வந்துள்ளார்ர்.

 விசாரணைகளில் கண்டறியப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகள்,  தொலைபேசி பதிவுகளின் பிரகாரம்,

 2019 ஏபரல் 20 ஆம் திகதி  இரவு 8.51 இற்கு  தற்கொலைதாரியான மொஹம்மட் அசாத், கொழும்பு - மருதானை சாஹிரா கல்லூரிக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஈ.பி. என்.டி. 2664 எனும்  சொகுசு பஸ் வண்டியில்  கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளார்.  அந்த பஸ் வண்டி மட்டக்களப்பை அடைந்ததும்  மொஹம்மட் அசாத் பஸ்ஸில் இருந்து இறங்கும் போது நேரம் 2019 ஏப்ரல் 21 அதிகாலை 2.12 ஆகும்.

 கொழும்பில் இருந்தே ஒரு கைப்பை, தோழில் ஒரு பாரிய பையுடன் அசாத்  மட்டக்களப்பு வந்தமை சி.சி.ரி.வி.காட்சிகள் ஊடாக தெளிவாகிறது. பஸ்ஸில் தோள் பையை பஸ்ஸின் பிரத்தியேக பொருட்கள் வைக்கும் கீழ் பகுதியிலும் கைப்பையை பஸ்ஸின் மேல் இராக்கையிலும் வைத்தவாறே அசாத் பயணித்துள்ளார். பஸ்சின் 2 ஆவது ஆசனமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 மட்டக்களப்பில் இறங்கிய  அவர் அங்கிருந்து முச்சக்கர வண்டி ஊடாக  மட்டக்களப்பு ஜும் ஆ பள்ளிவாசலுக்கு செல்வது  எல்.பி.பினான்ஸ், ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலைய சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக உறுதியானது.

 அவர் மட்டக்களப்பு ஜும் ஆ பள்ளிவாசல் அதிகாலை தொழுகைக்காக திறக்கப்படும் வரை சுமார் 2 மணித்தியாலத்துக்கு மேலாக வெளியே காத்திருக்கும் காட்சிகள் பள்ளிவாசல் சி.சி.ரி.வி. காணொளிகளில் பதிவகையுள்ளன.  

மட்டக்களப்பு ஜம்முஸ் சம்மான் ஜும் ஆ பள்ளிவாசல் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம்  2019 ஏப்ரல் 21 அதிகாலை 4.38 இற்கு பிரதான வாயில் திறக்கப்பட்டதுடன் அதன் பின்னர் உள் நுழையும்  அசாத், அங்கு ஓய்வறைக்கு செல்வது,  தொழுகையில் ஈடுபடுவது என அனைத்தும் பதிவாகியுள்ளன. அதன் பின்னர்  காலை 8.32 மணிக்கு உடைகளையும் மாற்றிக்கொண்டு பள்ளிவாசலில் இருந்து வெளியேறுவது பள்ளிவாசல் சி.சி.ரி.விகளில் பதிவாகியுள்ளது.

 பள்ளிவாசலில் இருந்து 10 - 15 நிமிடங்களுக்குள் பொடி நடையாக செல்லும் தூரத்தில் சீயோன் தேவாலயம் உள்ள நிலையில் அதன் பிரகாரமே அங்கு நடையாக சென்று அவர் இந்த தாக்குதல்களை நடாத்தியுள்ளார்.

  1985 ஆம் ஆண்டு பிறந்துள்ள இந்த தற்கொலைதாரியின்  தாயாரான அலியார் லதீபா பீபியின் இரத்த மாதிரிகளைப் பெற்று முன்னெடுத்த டி.என்.ஏ. சோதனைகளில் மொஹம்மட் அசாத் தான் தற்கொலைதாரி என்பதை உறுதி செய்தோம்.  குறித்த தாயார் இந்த விவகாரத்தில் சாட்சிகளை அழித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அசாத்தின் தந்தையார் ஒரு மீன் பிடி நடவடிக்கையுடன் தொடர்புடைய தொழிலாளி என்பதுடன் அவர் 1990 களில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

2005 ஆம் ஆண்டு வணிகத் துறையில் க.பொ.த. உயர் கல்வியைக் கற்றவர் அதன் பின்னர் கட்டார் சென்றுள்ளார்.  2012 ஆம் ஆண்டு அவருக்கு கல்முனையைச் சேர்ந்த பெரோசாவுடன் திருமணம் நடந்துள்ளது. 

அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கவில்லை. அசாத்திடம் இரு கடவுச் சீட்டுக்கள் இருந்தன. அதன் ஊடாக அவர் கட்டார் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களுக்கு மட்டுமே சென்றுள்ளார்.  வெளிநாட்டிலிருந்து வந்த அவர்,  முதலில் காய்க்கறி வர்த்தகமும், பின்னர் சொப்பின் பை வர்த்தகமும் செய்துள்ளார்.

 தாக்குதல் தினத்துக்கு முன்னர், முதலில் கல்முனையில் இருந்து தனது மனைவியுடன் காத்தான்குடியில் உள்ள தயார் வீட்டுக்கு சென்று அவரை பார்வையிட்டுள்ளார் அசாத்.  பின்னர் கல்முனைக்கு சென்று அங்கிருந்து 253 - 8118 எனும் இலக்க வேனிலேயே கொழும்புக்கு வந்துள்ளார்.

2019 ஏப்ரல் 19 ஆம் திகதி அதிகாலை வேளை, கல்முனையில் இருந்து தனது மனைவி பாத்திமா பெரோசாவுடன்  வாடகை வேனில்  மொஹம்மட்  நஸார் மொஹம்மட் அசாத் கொழும்புக்கு வந்துள்ளார். 

வேன் மட்டக்களப்பு பகுதியில் ஒருவருக்கு சொந்தமாந்து. அதனை வாடகைக்கு பெற்று மொஹம்மட் ரிபாஸ் என்பவர் செலுத்தியுள்ளார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அசாத் மனைவியுடன்  கொள்ளுபிட்டி - லகீ பிளாஸாவில் இருந்த பயங்கரவாதிகளின் பாதுகாப்பு இல்லத்துக்கே வந்துள்ளார்.

 கொள்ளுப்பிட்டி லகீ பிளாஸா பாதுகாப்பு   இல்லத்துக்கு மொஹம்மட் அசாத் வரும் போதும், அங்கு  பயங்கரவாதி சஹ்ரான், அவரது பிள்ளைகளும், நீர்கொழும்பு - கட்டுவபிட்டி தேவாலய தற்கொலை குண்டுதாரியான  மொஹம்மட் ஹஸ்தூன் அவரது மனைவி சார ஜஸ்மின் அல்லது புலஸ்தினி ஆகியோர் அங்கு இருந்துள்ளனர். 

அங்கு அன்றைய தினம் சிறிது ஓய்வு எடுத்த பின்னர் , அவர்கள் அனைவரும்  அசாத் சென்ற வேனில் பாணந்துறை பாதுகாப்பு இல்லத்துக்கு சென்றுள்ளனர். 

பாணந்துறையில், சஹ்ரானும், ஹஸ்தூனும், அசாத்தும் இறங்கியுள்ளதாகவும், அவர்களது மனைவிமாருடன், சஹ்ரானின் சகோதரனான ரில்வான் அந்த வேனில் ஏறி சாய்ந்தமருது நோக்கி சென்றுள்ளதாகவும்  விசாரணையில் தெரியவந்தது. 

சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து  தற்கொலை செய்துகொண்ட நிலையில், அங்கு அசாத்தின் மனைவி பாத்திமா பெரோசாவின் சடலமும் காணப்பட்டது. அது டி.என்.ஏ.  பரிசோதனை ஊடாக உறுதி செய்யப்பட்டது.' என சாட்சியமளித்தார்.