(நா.தனுஜா)

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டிய கட்டாயத்தேவையொன்று ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், அதுகுறித்த விபரங்களையும் பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 52 பக்க அறிக்கையொன்றையும் வெளியிட்டிருக்கிறது.இவ்வறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக அந்நிலையம் வெளியிட்டிருக்கும் பூர்வாங்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் சிறைச்சாலைக் கட்டமைப்புக்கள் மற்றும் முறைமைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று பல வருடங்களாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும், அதில் சொற்பளவான முன்னேற்றத்தையே இலங்கை அடைந்திருக்கிறது. 

எனினும், கொரோனா வைரஸ் பரவல் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் ஒரு அவசர கவனத்தைத் தோற்றுவித்திருக்கின்றது. நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு வரையறைகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் சிறைச்சாலைகளின் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக சிறைக்கைதிகளுக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் வைரஸ் பரவல் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்நிலை உள்ளமை இனங்காணப்பட்டது.

இந்த அச்சநிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட கிளர்ச்சியில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் சிறைச்சாலைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஓர் ஆணைக்குழுவை நியமிப்பதற்குத் தூண்டுதலை ஏற்படுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து மிகச்சில நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதுமாத்திரமன்றி அண்மையில் சிறைச்சாலைகளில் நடைபெறத்தக்க சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்கும், அவற்றைத் தடுப்பதற்குமென ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டது. 

இவற்றைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையைத் தயாரித்திருக்கிறோம்.