பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்றுநராக செயற்படும்  நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான டேனியல் வெட்டோரி பங்களாதேஷ் கிரிக்கெட் சபையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனது சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையயடுத்து, ஐ.பி.எல் உள்ளிட்ட இருபதுக்கு 20 போட்டிகளில் பயிற்றுநராக  செயற்பட்டு வந்த வெட்டோரி, தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுநராக இருந்து வருகிறார். 

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக வெட்டோரியை 100 நாட்களுக்கு மாத்திரம், சிறப்பு சுழற்பந்துவீச்சுப் பயிற்றுநராக  அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்திருந்தது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போட்டிகள் எதுவும் நடக்காததால், உலக இருபதுக்கு 20 தொடரும் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையில் பணிபுரியும் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வழங்கி விடுமாறு அவர் கூறியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நிஜாமுதீன் செளத்ரி தெரிவித்துள்ளார்.   

டேனியல் வெட்டோரி எவ்வளவு தொகையை வழங்குமாறு கூறினார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கடும் நிதிச் சிக்கலில் இருக்கும் நிலையில் அவர் செய்த உதவியால் பல ஊழியர்கள் பயனடைவார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர்  ரஸல் டொமின்கோவை விட, டேனியல் வெட்டோரி அதிக சம்பளம் வாங்குகின்றவராக  தெரிவிக்கப்படுகின்றது. அதில் அவருடைய மாதாந்த சம்பளம் இரண்டு இலட்சத்து ஐந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, டேனியல் வெட்டோரியின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.