கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இங்கிலாந்துக்கு சென்று விளையாடுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இங்கிலாந்தில் குறைவடைந்து வருவதால், தற்போது அங்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்த அந்நாட்டு அரசு அனுமதியித்துள்ளது.

இம்மாதம் ஆரம்பிக்கப்படவிருந்த  இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒத்திவைக்கபட்டிருந்தது. எனினும், தற்போது இங்கிலாந்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை டெஸ்ட் போட்டித் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை போட்டி அட்டவணையை தயாரித்துள்ளது.இப்போட்டிகள் மூடிய மைதானத்தில் ரசிகர்களின்றி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 14 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்ட்டது.  இதில் சிரேஷ்ட வீரரான டெரன் பிராவோ, ஷிம்ரொன் ஹெட்மையர், கீமோ போல் ஆகிய மூவரும் இடம் பிடித்திருந்தனர். இவர்கள் மூவரும் ‘உயிர் பாதுகாப்பு சூழலை’ காரணம் காட்டி இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

‘‘ மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ள அவர்களின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது’’ என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை  தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவர்கள் மூவருக்குப் பதிலாக யார்? யாரை இங்கிலாந்துக்குச் செல்லவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகிறார்கள் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை  இதுவரை அறிவிக்கவில்லை.தெரிவு செய்யப்படும் அந்த மூன்று வீரர்களும் முடியாதென்று கூறினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.