அமெரிக்கத்தூதரக அதிகாரி இலங்கைக்கு வருகைதந்த போது இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோடு, கொவிட் - 19 தடுப்பிற்கான அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாக அமெரிக்கத்தூதரகம் அறிவித்திருக்கிறது.கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தனக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்காத போதிலும்கூட, அவர் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது.

வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் அனைவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கமாகும்.

இதுகுறித்து அமெரிக்கத்தூதரகம் வழங்கியிருக்கும் விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

'வெளிவிவகார அமைச்சின் ஒத்துழைப்புடன் அமெரிக்கத்தூதரக உத்தியோகத்தர் தனிமைப்படுத்தப்படல் உள்ளிட்ட இலங்கையின் கொவிட் - 19 வைரஸ் பரவல் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகின்றார். அமெரிக்கத்தூதரக அதிகாரி இலங்கைக்கு வருகைதந்தமையின் போதும் இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டன'.