சீனாவில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்துள்ளார்கள். 

சீனாவின் தெற்கிலுள்ள குவாங்ஸி பிராந்தியத்திலுள்ள ஆரம்ப பாடசாலையைிலே இன்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பாடசாலைக்கு கத்தியுடன் நுழைந்த 50 வயதான பாதுகாப்பு காவலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில்  சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதோடு, பாடசாலையின் தலைமையாசிரியர், மற்றொரு பாதுகாப்பு காவலர் மற்றும் ஒரு சிறுவன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பரவ ஆரம்பித்த பின்னர் பொலிஸார் உடனடியாக பாடசாலைக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் குற்றவாளியை  கைது செய்துள்ளனர். 

இந்த தாக்குதலில் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் சீனாவில் வேலையில் அதிருப்தி அடைந்தவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.

சீனாவில் இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பீஜிங்கில் உள்ள பாடசாலை ஒன்றில் இதேபோன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு 28 வயதான நபர் ஒருவர் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய 9 குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சீனாவில் பாடசாலைகளில் கத்திக்குத்து நடைபெறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.