கொரோனா வைரஸ் காரணமாக தமது பொருளாதாரம் சீரழிந்து விட்டதே என ஒரு பகுதி மக்கள் தலையில் கை வைக்க, நிதி நிறுவனங்கள் சிலவற்றில் தங்கள் பணத்தை வைப்பிலிட்டவர்கள் அது மீளக் கிடைக்குமா என்ற ஏக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கவர்ச்சிகரமான வட்டி காரணமாக பெரும்பாலான மக்கள் அதிலும், ஓய்வு பெற்றவர்கள் இவ்வாறு நிதி நிறுவனங்களில் பணத்தை  வைப்பிலிட்டு பின்னர் ஏமாந்து விடுகின்றனர். 

இலங்கையில் மாத்திரமன்றி இந்தியாவிலும் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் பல  இடம்பெற்றுள்ளன. குறித்த நிதி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்குரோத்து நிலையை அடைந்தவுடன், அதனை நம்பி பணத்தை வைப்பிலிட்டவர்கள் பரிதாபகரமான நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.

இவ்வாறு பணத்தை வைப்பிலிட்டு, வங்குரோத்து அடைந்த வாடிக்கையாளர்கள், குறித்த நிறுவனத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடி வருவதும் வழமையாகிவிட்டது.

அப்பாவி மக்கள், தாங்கள் சிறிது சிறிதாக சேமித்த பணத்தை உயர்ந்த வட்டி வீதம் கருதி இவ்வாறு நிதி நிறுவனங்களில் வைப்பிலிட்டு, பின்னர் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

இது  தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. பலருக்கு நிதி நிறுவனங்கள்  பணத்தை இன்று, நாளை வழங்குவதாக உறுதி கூறுகின்றனவே தவிர அவ்வாறு நடப்பதில்லை. இதனால் அவர்கள் அதனை எண்ணி எண்ணியே நோயாளியாகி விடுகின்றனர்.

இதேவேளை, குறித்த இரு நிதி நிறுவனங்களில், நிதியை வைப்பிலிட்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ள வாடிக்கையாளர்களின் நிதியை, மீள வழங்கும் நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மத்திய வங்கியின் பிரதி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இரு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நிதிப்  பாவனை முறைகேடும் இடம் பெற்றுள்ளது. இவை  நிதி நிறுவனம் தொடர்பான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரச  நிர்வாக செயலொழுங்கில் நிதி நிறுவனம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாவதற்கு இடமளிக்க முடியாது.

 இந்த நிதி நிறுவனங்களில் நிதியை வைப்பிலிட்ட வாடிக்கையாளர்களது, நிதி மீள வழங்கப்பட்ட வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை. 97 சதவீதமான வைப்புகளின் நிதி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் எனவும், மிகுதி 3 சதவீத வைப்புக்கான நிதி பின்னர் வழங்கப்படும் எனவும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எச்.வி கருணாரத்ன தெரிவித்தார்.

நிதி நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். இன்றேல் மக்கள் சகல வழிகளிலும் நம்பிக்கை  இழந்துவிடுவார்கள்.