(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில் சந்தீப் சம்பத் எனும் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில்,  சந்தேக நபருடன் இணைந்து சதி செய்து போலி சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், தற்போது கனக்கேசந்துறை உதவி பொலிஸ் அத்தியட்சராகவும் கடமையாற்றும்  சுதத் அஸ்மடலவை  5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான்  கனஜ்சனா நெரஞ்சலா டி சில்வா இன்று உத்தரவிட்டார்.குறித்த வாகன விபத்து விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி.  எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சர் அஸ்மடலவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமறு கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும் அந்த கோரிக்கையை மேலதிக நீதிவான் கனஜ்சனா நெரஞ்சலா டி சில்வா நிராகரித்தார். அதன் பின்னர்  உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல சட்டத்தரணி ஒருவர் ஊடாக  மன்றில் சரணடைந்தார். இதனையடுத்தே அவருக்கு பிணையளிக்கப்பட்டது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவானது, சுதத் அஸ்மடலவைக் கைது செய்ய நீதிமன்றிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிடியாணைக் கோரியது. அது குறித்த தீர்மானத்துக்காக இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது முறைப்பாட்டாளர் தரப்பில்  சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதி நிதித்துவம் செய்து ஜெனரால் திலீப பீரிஸ்,  அரச சட்டவாதி சக்தி ஜாகொட ஆரச்சி ஆகியோரும்,  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஆகியோர் ஆஜராகினர்.

இதன்போது,  மூன்றாம் சந்தேக நபரான அஸ்மடல தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிவான் கனஜ்சனா நெரஞ்சலா டி சில்வா, அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என சுட்டிக்கடடினார்.  

இந்நிலையில் பொலிஸார் கோருவதைப் போன்று பிடியாணை  பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என  சுட்டிக்காட்டிய நீதிவான்,  சட்ட மா அதிபர் சார்பில் முன் வைக்கப்பட்ட  விடயங்களையும் கருத்தில் கொண்டு 3 ஆம் சந்தேக நபரான  சுதத் அஸ்மடலவுக்கு அடுத்த வழக்குத் தவணையில் மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பித்தது.

இதன்போது உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல,  சிரேஷ்ட சட்டத்தரனி அஜித் பத்திரண, சட்டத்தரணிகளான ரஜித்த கொடித்துவக்கு,  ஹரின் ஹெட்டி ஆராச்சி,  தரிந்து மதுசங்க ஆகியோர் ஊடாக  நகர்த்தல் பத்திரம் ஒன்றினை மன்றில் தககல் செய்து சரணடைந்தார்.

முன்னாள் அமைச்சரின் சாரதியே வாகனம் செலுத்தியதாக பதிவு செய்யுமாறு வெலிக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனையை பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவே வழங்கியதாக இரு சாட்சியாளர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

 தற்போதும் அவர் உண்மையை மறைக்க முற்படுகின்றார். எனவே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டால் விசாரணைகள் பாதிக்கப்படலாம்.  எனவே அவரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் வரையிலேனும் அவர் விளக்கமறியலில் வைக்கவேண்டும் என ஜெனரால் திலீப பீரிஸ் மன்றில் கோரினார்.

  முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் , 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி சி.சி.டி.யில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்கவும் உத்தரவிட்டார்.