(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாநகர சபைக்கு யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள 60 உறுப்பினர்களில் 58 பேர் பொதுத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளனர். கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் விசேட சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பிலே இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளனர். இதன்போது மாநகரசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது வேறு எந்த அரசியல் கூட்டணிக்கோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளிக்க கூடாது என்ற பிரேரணை ஒன்றை மாநகர சபை உறுப்பினர் டைடஸ் பெரேராவினால் முன்மொழியப்பட்டு, பிரதி மேயர் மொஹமட் இக்பாலினால் வழிமொழியப்பட்டுள்ளது.

மேலும் கட்சி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து சமுகமளிக்காமல் இருப்பவர்கள் மற்றும் ஆதரவளிக்காமல் இருக்கும் மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சட்டப்பிரிவுடன் கலந்துரையாடி அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.