கிழக்கில் உள்ள மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட செயலணியில் தனிச் சிங்கள உறுப்பினர்கள்  உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலையடைவதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் ஜனநாயகப் பண்புகளை மதிக்கும் தன்மை நலிவுற்று, ஆதிக்க ஆட்சிமுறை மாற்றமுறுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் எனது கண்டனத்தை வெளிப்படுத்தும் முகமாக இவ்வறிக்கை அமைகிறது.

இலங்கையின் மரபுரிமைகளைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்கு உரித்தாக்கிக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆயினும் கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களாகும். ஆயினும் அதைக் கவனத்தில் எடுக்காமல், கிழக்கில் உள்ள மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட செயலணியில் தனிச் சிங்கள உறுப்பினர்கள்  உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலையடைகிறேன்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்படும் தமிழ் மற்றும் முஸ்லீம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எம் மக்கள் மனதில் தோன்றுவது தவிர்க்க முடியாது. அவ்வாறு அடையாளம் காணப்படும் இடங்கள் எம் மக்களின் வரலாறு மற்றும் வாழ்வியலுடன் அங்கீகரிக்கப்பட்டு,  தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் மீள்நிர்மாணித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்குடன் இன - மத பேதமற்ற செயலணி ஒன்று உருவாக்கப்படாமை ஜனநாயகப் பண்புகளை மீறும் செயல்களே அமைகின்றன. 

கடந்த மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற யுத்தத்தால் எம்மக்களின் வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த மரபுரிமைச் சின்னங்கள் அழிந்தும், அழிக்கப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஜனநாயகப் பண்புகளை மதிக்கும் தன்மை நலிவுற்று, ஆதிக்க ஆட்சிமுறை மாற்றமுறுகிறதா என்ன கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாது. ஆகவே இலங்கையராக வேற்றுமைகளை களைந்து, சகோதரத்துவத்துடன், ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்வதற்கான வழிமுறைகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.