பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான உமர் அக்மலினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான பக்கீர் மொஹமட் கோக்கார் விசாரிக்கவுள்ளார்.

தனக்கு விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவுக்கு எதிராக உமர் அக்மல் மேன்முறையீடு செய்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அக்மலின் மேன்முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான பக்கீர் மொஹமட் கோக்காரை நியமனம் செய்துள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தனது தடை தொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக, பாகிஸ்தான் பிரதமருக்கு பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் சட்ட நிறுவனத்தின் உதவியை உமர் அக்மல் நாடியிருந்தார். தற்போது, இந்த நிறுவனத்தின் செயற்பாடு மூலமே அக்மலுக்கு மேன்முறையீட்டை முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.   

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உமர் அக்மலின் மேன்முறையீட்டை விசாரிக்கவுள்ள நீதிபதி, முறையீட்டை விசாரிப்பதற்கான திகதியொன்றை தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்திருப்பதோடு, குறித்த திகதியில் உமர் அக்மலின் மேன்முறையீடு தொடர்பிலான விளக்கம் கேட்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு முன்னர் உமர் அக்மலை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் உமர் அக்மலிடம் விளக்கம் கோரப்பட்ட போதிலும், போதிய விளக்கமளிக்கத் அவர் தவறியதால், உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டு கால போட்டித் தடையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதித்தது

இதற்கு முன்னரும் பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் உமர் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிதாக தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பாபர் அஸாமின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.