(இராஜதுரை ஹஷான் )

தமிழ் மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் பலமான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை தொடர்ந்து நம்புவதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

வியத்தக அமைப்பின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ்  பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவின்  முறையான திட்டமிடல் ஊடாகவே இந்த வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

கொரோனா  வைரஸ் தொற்று இதுவரையில் சமூக தொற்றாக  பரவலடையவில்லை. நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது.

பொதுத்தேர்தலை  பிற்போட எதிர்தரப்பினர் முன்னெடுத்த அரசியல் சூழ்ச்சிகள் நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை  விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இடம்பெற்வுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்கினை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும். இந்த வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்கள் பங்குதாரர்களாக வேண்டும் என்பதே எமது பிரதான எதிர்பார்ப்பு.

ஐக்கிய தேசிய கட்சு தமிழ் மக்களுக்கு எவ்வித அபிவிருத்திகளையும் செயற்படுத்திக்  கொடுக்கவில்லை.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலேயள வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்திகள் துரிதமாக முன்னைடுக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் போலியான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களக ஏமாற்றியது.

ஆகவே தமிழ் ,முஸ்லிம் மக்கள் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியை நம்புவதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. என்றார்.