தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள், வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்தனர்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயானம் ஒன்றிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன் ஐந்து பொலித்தீன் பைகளில் வைத்து  கட்டப்பட்ட நிலையில் பெற்றோல் குண்டுகள் இரண்டு, வாள் என்பனவும், துவிச்சக்கர வண்டி ஒன்றும்  இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

தெல்லிப்பளை பகுதியில் இராணுவத்தினர் சுற்றுக்காவலுக்கு (ரோந்து) சென்ற போது குறித்த மயான பகுதியில் இருந்து சில இளைஞர்கள் இராணுவத்தினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து இராணுவத்தினர் அவ்விடத்தில் சோதனை நடத்திய போது குறித்த பொருட்கள் மீட்கப்பட்டு, தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.