மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும்  ஜூலை 8 ஆம் திகதி ஆரம்பமாகும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருந்த நிலையில்  கொரோனா பரவல் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட்  தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இத்தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் முயற்சிகள் மேற்கொண்டன. இதன்படி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று கிரிக்கெட் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை அனுமதியளித்தது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இத்தொடரானது ஜூலை 8 ஆம் திகதி முதல் ஜூலை 28 ஆம் திததி  வரை நடைபெறும். முதல் போட்டி 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை ஏகாஸ் பவுல் மைதானத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையும் மூன்றாவதும் கடைசியுமான போட்டி 24 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதிவரையும் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்திலும்  இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. எனினும் இப்போட்டிகள் அனைத்தும் ரசிகர்களின்றி  மூடிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியின் இடைநடுவில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை விடுத்த உத்தரவுக்கமைய உடனடியாக தமது நாட்டுக்கு திரும்பிச் சென்றிருந்தமை நினைவுகூரத்தக்கது.