ஆடை வர்த்தகம் இந்த நாட்டின் மிகப் பெரிய ஒரு பொருளாதார மார்க்கம் என்பதைப் புரிந்துகொண்டு, இந்த வர்த்தத்துறையில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் முறையான திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், கல்விமானுமான கலாநிதி வி.ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆடைகள் வர்த்தகம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே கலாநிதி ஜனகன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவையாவன,

“கொவிட்-19 தொற்றுக் காரணமாக இன்று பல்வேறு வர்த்தக மார்க்கங்கள் பாதிப்படைந்துள்ளன. அதில் ஆடைகள் வர்த்தகம் மிகவும் பாதிப்படைந்து மீள வழியற்றுக் காணப்படுகின்றது. இதனை மீண்டும் உயிர் பெறவைக்க முறையான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

“இந்த ஆடைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் உட்பட அனைவரும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சிங்கள - தமிழ் புத்தாண்டு மற்றும் ஈகைத் திருநாளை எதிர்பார்த்தும் கடந்த டிசெம்பர் மாதத்தில் கடனடிப்படையில் ஆடைகளை மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் கொள்வனவு செய்து வைத்திருந்தார்கள். ஆனால், இந்த அனர்த்தத்தால் எந்தவிதமான வியாபரமும் அற்று, கொள்வனவு செய்த பணத்தைக் கூட மீளக் கொடுக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். 

“இன்று மொத்த வியாபாரிகளிடமே மீண்டும் பொருள்களை ஒப்படைக்க முற்படுகிறார்கள். இப் பொருள்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் மொத்த வியாபாரிகளும் தடுமாறுகிறார்கள். மொத்தத்தில் இந்த வியாபாரிகள் அனைவரும் படுபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும், இன்று ஊரடங்கு சற்றுத் தளர்ந்துள்ள நிலையிலும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களினால் ஆடைகளைக் கடைகளுக்குச் சென்று வாங்குவதற்கு மக்கள் தயங்குகிறார்கள். இதனால் இன்றும் கூட இவ்வியாபாரிகளுக்கு எந்தவித விமோசனமும் இல்லாமல் போயுள்ளது. 

“இவர்கள் அரசாங்கத்திடம் தங்களுடைய நிலைக்காகப் பணத்தைக் கேடக்கவில்லை, மாறாக மீண்டும் ஆடைகளை மக்கள் கடைகளுக்கு வந்து வாங்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றே கோரிக்கை வைக்கிறார்கள். மேலும், ஆடைகளை மக்கள் நேரடியாகக் கொள்ளவனவு செய்யக் கூடிய சுகாதாரப் பொறிமுறை ஒன்று விசேடமாக உருவாக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடம் உள்ளது. 

“ஆடை வர்த்தகம் இந்த நாட்டின் மிகப் பெரிய ஒரு பொருளாதார மார்க்கம் என்பதைப் புரிந்துகொண்டு, இந்த வர்த்தத்துறையில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் முறையான திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் அவர்களை நம்பியுள்ள ஊழியர்கள், குடும்பங்கள் அனைவரும் மிகப் பெரியளவிலான பொருளாதார சிக்கல் நிலையை எதிர்கொள்வார்கள்” என, கலாநிதி ஜனகன் மேலும் தெரிவித்துள்ளார்.