கற்பித்தலும் ஆசிரியரும்

02 Jun, 2020 | 08:33 PM
image

‘‘கல்வி ஒன்றே இந்த உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம்’’ என்பது நெல்சன் மண்டேலாவின் வாக்கு. ஒரு மரத்திற்கு எப்படி அதன் வேர் முக்கியமோ அது போல தான் மனித சமூகத்திற்கு கல்வி அவசியமாக காணப்படுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் கல்வி என்பது ஓர் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இவ்வாறு அத்தியாவசிய தேவையாக விளங்கும் கல்விச் செயற்பாட்டில் கற்பித்தலும் ஆசிரியரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அந்தவகையில் கற்பித்தல் என்பது கற்றல் செயல்முறையை எளிதாக்கும் கருமம் கற்பித்தல் என சுருக்கமாக கூறிக்கொள்ளலாம். கற்பதனால் மாணவன் பெற்றுக் கொள்ள முயலும் அனைத்தையும் அடைவதில் மாணவனுக்கு ஆற்றும் பல்வேறுபட்ட ஆசிரியர் செயற்பாடே கற்பித்தல் (Teaching) ஆகும். கற்பித்தலை ‘‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’’ என்ற கூற்றுக்கு இணங்க ஆசிரியர் தெய்வங்களே மேற்கொள்கின்றனர். 

இவ்வுலகில் எத்தனையோ தொழில்கள் காணப்பட்டாலும் மதிக்கத்தக்கதும் போற்றத்தக்கதுமான தொழிலாக ஆசிரியர் தொழிலே அமைகிறது. வாழும் காலம் மட்டுமல்ல ஒரு மனிதன் மரணித்த பின்பும் பிற மனிதர்களால் போற்றப்பட்டு மனங்களில் ஒரு சிலரால் தான் வாழவும், ஆளவும் முடியும்.

அவர்களில் ஆசிரியர்கள் முதல்நிலை வகிக்கின்றனர். பாரம்பரிய சமுதாயத்தில் ஆசிரியர் தொழில் இறை தொண்டாக கருதப்படுகின்றது. அதன் பின்னணியில் சமுதாயத்தின் தலவிருட்சமாக இருந்து பாடசாலை களில் கற்றல் கற்பித்தல் ஊடாக மாணவர்களின் எதிர்கால வாழ்வை சிறப்பிக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்களாவர்.

ஆசிரியர் தொழிலில் உன்னத நிலையினை பேணும் வகையில் ஆசிரியர்களில் கௌரவம், மேன்மை, உயர்வு, மாண்பு என்பவற்றினை  எடுத்தியம்புவற்காக 1966இல் பரிஸ் யுனெஸ்கோ மாநாட்டின்படி அக்டோபர் 06 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. 1991ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 முதன்முதலாக ஆசிரியர் தினம் கொண்டாடப் பட்டது.

இவ்வாறான உயர்நிலை கொண்ட ஆசிரியர் தொழிலை கடமையாக கருதாமல் பாக்கியமாக கருதவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் ஒழுங்கில் ஒரு மனிதனை முழுமைப்படுத்தும் ஆற்றல்கள் குருவிடமே உள்ளது. அந்தவகையில் ஒரு ஆசிரியரை பொறுத்தே மாணவரின் நிலை தீர்மானிக்கப்படுகிறது.

மாணவர்க ளுடைய வெற்றிக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயற்பாடுகள் துணையாக அமையும். அந்த வகையில் ஆசிரியர்கள் சிறந்த கற்பித்தல் செயற்பாட்டை நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரு ஆசிரியர் சிறந்த கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமானால் அறிவு மட்டும் போதாது அதையும் தாண்டிய செயற்பாடுகளான மனப்பாங்குகள், அர்ப்பணிப்பு, ஊக்கம், தேடல், தத்துவம் என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். அதுமட்டு மல்லாமல் மாணவர்களின் உளவியல் தன்மைகளை அறிந்து கொள்ளக் கூடிய திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஆசிரியர் ஒரு சிறந்த கற்பித்தலை மேற்கொள்ள சில நடிபாங்குகளை கொண்டிருக்க வேண்டும். அந்தவகையில்  ஒரு நண்பர், ஆலோசகர், துன்பத்தில் கை கொடுப்பவர், ஆய்வாளர், அவதானிப்பாளர், தாய், தந்தை, வழிகாட்டி, நீதிபதி, மேற்பார்வையாளர் போன்ற நடிபாங்குகளின் அடிப்படையிலேயே சிறந்த கற்பித்தலை மேற்கொள்ளலாம்.

மேலும் விளைதிறன் உள்ள ஆசிரியர் வினைத்திறனுள்ள கற்பித்தலை மேற்கொள்வது சிறந்த ஆசிரியர் வாண்மை எனப்படும். ஒரு சிறப்பான ஆசிரியர் துறை தொடர்பான சிறப்பான அறிவையும் சுதந்திரமான செயற்பாட்டையும் பொறுப்பேற்கும் திறனையும் கொண்டிருந்தால்தான் மாணவர்களின் திறமைகளை அறிந்து அதற் கேற்றவகையில் வகுப்பறையை நெறிப்படுத்த முடியும்.

மேலும் ஆசிரியர்கள் கற்பித்தலில் விருப்பம் உடையவராக இருத்தல் வேண்டும். மணி ஒலித்ததும் கடமைக்கு வகுப்பறையில் சென்று கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் சிறந்த விளை திறனை உண்டு பண்ணுவதில்லை. கற்பித்தலில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆசிரியர் கற்பிப்பதற்கும் மாணவர்கள் கற்பதற்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.

இதன் மூலமே சிறந்த கற்றல், கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கலாம். ஒரு வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்பு குறித்த விடயத்தினை அது சார்ந்த புதிய தகவலுடன் நவீன அறிவியல் பாதையில் பலதரப்பட்ட தரவுகளையும் திரட்டி ஆசிரியர் தன்னை நன்கு தயார் படுத்திக்கொண்டு கற்பித்தலில் ஈடுபட வேண்டும். இதுவே விடயம் சார்ந்த புலமை எனப்படுகிறது.  

விடயத்தின் எந்த அறிவை எப்போது எவ்வாறு கற்பிப்பது என்பதற்கு ஆசிரியர் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். இவ் திட்டமிடலின் போது மாணவர்களின் நுண்ணறிவு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்தோடு கற்றல் எந்த அளவிற்கு இடம் பெற்றுள்ளது என்பதை அறிய மதிப்பீட்டுத் திட்டம் வகுத்துக் கொள்வது அவசியம்.

அத்தோடு வேலைத்திட்டம், பாடக்குறிப்புகள் என்பவற்றை முழுமையாகவும், தெளிவாகவும் பேண வேண்டும். அத்தோடு கற்பித்தலில் ஜனநாயகம் பின்பற்றப்பட வேண்டும், எந்த ஒரு மாணவனின் மீதும் பாரபட்சமும் காட்டக்கூடாது, கல்வியில் அக்கறையோ அவதானமோ காட்டாத மாணவன் வேறெந்த துறையிலோ விருப்பம் உள்ளவனாக காணப்படுவான் ஆகவே எல்லா மாணவர்களும் திறமை உடைய மாணவர்கள். ஆகவே பாரபட்சம் காட்டாது அவர்களது திறமைக்கு ஏற்ற கற்பித்தல் செயற்பாட்டை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு வகுப்பறையில் கற்பிப்பதற்கான சூழலை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும். அந்தவகையில் வகுப்பறையானது மிகவும் சந்தோசமாகவும், ஆரோக்கியமானதும், மன அமைதி நிறைந்த இடமாகவும் விளங்க ஆசிரியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு கலை திட்டத்தையும் கல்விக் கொள்கைகளை அடிப்படையாக வைத்தே கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது ஆசிரியர் மையக் கல்வி, மாணவர் மையக் கல்வி, நூற்கல்வி என மாற்றமடைந்து வரும் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ப ஆசிரியர் மாணவர் மையக் கல்வியை திட்டமிட்டு ஒரு நிலைமாற்று வகிபாகத்துடன் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டும்.

அத்தோடு தற்காலத்தில் பல புதிய கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் விளையாட்டு முறை, நடிப்பு முறை, செயல்திட்ட முறை, விரிவுரை ஆற்றுதல் முறை, செய்முறை விளக்கம், கலந்துரையாடல் முறை, விவாதம் போன்ற புதிய கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இவற்றை பின்பற்றி மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு புதிய முறைகளை அறிமுகப்படுத்தினாலும் புத்தகத்தை வைத்துக்கொண்டு பழைய முறைகளை பின்பற்றி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களும் சற்று அதிகமாகவே காணப்படுகின்றனர்.

அத்தோடு தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நவீன கற்பித்தல் முறைகளையும் வகுப்பறை கற்பித்தல் செயற்பாட்டில் பயன்படுத்துகின்றனர். இதற்காக தற்போது 5E கற்பித்தல், eLearning மற்றும் ஓடியோ, வீடியோ போன்ற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி கற்பித்தல். zoom meeting மூலம் Online கற்பித்தல், play school, smart classroom அத்தோடு ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கணினி மூலை செயற்பாட்டு மூலை, வாசிப்புமூலை, உணவுமூலை என்பவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு English as a life skill எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஆங்கிலம் கற்பித்தல். ‘‘இரு நகரின் நண்பர்கள்’’, ‘‘பாடசாலை சினேகம்’’ என நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆசிரியர் மாணவரை ஒன்றிணைத்து சிறந்த கற்பித்தலுக்கு நடவடிக்கை எடுத்தல் கற்பிக்கும் சாதன பொருட்களை பயன்படுத்தி கற்பித்தல் The condition of learning எனும் ஒன்பது நிகழ்வுகளைக் கொண்ட ரோபட் கானோயின் கற்பித்தல் முறை போன்ற நவீன கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துகின்றனர்.

மேலும் இலட்சிய வாதத்தின் படி ஒரு பாடசாலை பூந்தோட்டம் எனவும் ஆசிரியர் தோட்டக்காரன் எனவும் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒரு தோட்டக்காரன் எவ்வாறு செடிகளை பராமரித்து வளர்த்து எடுக்கிறானோ அதுபோல ஆசிரியர்களும் தமது சிறந்த கற்பித்தல் முறையால் சிறந்த தலைவர்களை உருவாக்கும் பணியை மேற்கொள்கின்றனர். 

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்து விளங்கும் ஆசிரியர் தொழில் ஒரு உயர் தொழில் என கருதப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட ஓர் அறிவுத் தளத்தை கொண்டிருத்தல் மற்றும் ஒழுக்கக்கோவை, தங்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளல். மேலும் சம்பள அளவுத்திட்டம், பதவி உயர்வு முறை போன்றன காணப்படுவதால் இது ஒரு உயர் தொழிலாகக் கருதப்படுகின்றது.

இவ்வாறு உயர்தொழில் வகிக்கும் ஆசிரியர்களின் வாண்மையை விருத்தி செய்வதினால் சிறந்த கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. அந்தவகையில் எமது நாட்டு ஜனாதிபதியால் மேற்கொள் ளப்பட்ட சுபீட்ச தொலை நோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்ட ஞானத்தை கொண்ட பிரஜை, அறிவைக் கொண்ட சமூகம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களது தரத்தை மேம்படுத்த தேசிய கல்வியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் பாடசாலை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டம் (SBPTD) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு தகவல் தொழில்நுட்பத் திறனுடைய ஆசிரியர்களை உருவாக்க ஆசிரியர்களுக்கு(ICDCAC, IPICT) போன்ற பயிற்சிகள் வழங்கப் படுகிறது. மேலும் ஆசிரியர்களுக்கு ஜப்பான், கொரியன் மொழி பயில்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்குவதோடு தமது கல்வி தரத்தை அதிகரிக்க உயர் படிப்புகளை மேற்கொள்ள சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ஆசிரியர் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அத்தோடு ஆசிரியர் கலாசாலையில் BED கற்கை முறை  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரியர் வாண்மை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும் இன்னும் பல ஆசிரியர்கள் வாண்மை அடையாமல் பல குறைபாடுகளை உடைய ஆசிரியர்களாக விளங்குகின்றனர். அந்தவகையில் ஆசிரியர் தொழிலை சேவையாக பார்க்காமல் சிலர் வியாபாரமாக பார்க்கின்றனர். பாடசாலையில் கற்பிப்பதை விட பிரத்தியோக வகுப்புகளில் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். அத்தோடு தமது தொழில் தரத்தையும் அறிவு மட்டத்தையும் உயர்த்திக் கொள்ள சில ஆசிரியர்கள் விரும்புவதில்லை. மேலும் பாடசாலைக்கு சென்று வகுப்பறைக்கு செல்லாத ஆசிரியர்களும் இன்னும் காணப்படுகின்றனர்.

ஆகவே ஆசிரியர் தொழிலை புனித தொழிலாக மதித்து சிறப்பான கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொண்டு அறிவு மற்றும் ஆளுமை நிறைந்த கல்விமான்களை உருவாக்க சிறந்த வாண்மை மிக்க ஆசிரியர்களால் முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்க ளும் இல்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48