இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவி எனக்கு கிடைத்ததில் மஹேநந்திர சிங் தோனியின் பங்களிப்பு முக்கியமானது என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராட் கோஹ்லி, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் சக வீரரான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் கலந்துரையாடினார். இதன்போது, அணித்தலைமை பதவி எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு  விராட் கோஹ்லி பதிலளிக்கையில்,

“இந்திய அணிக்குள் நுழைந்ததிலிருந்தே கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன். எல்லா போட்டிகளிலும் விளையாடும் பதினொருவரில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன்.

தோனியின் தலைமைத்துவத்தின் கீழ் விளையாடிய போது அவருடன் நெருக்கமாக செயற்பட்டேன். அதாவது அவர் விக்கெட் காப்பாளர், முதல் ‘ஸ்லிப்’பில் நான் நிற்பேன். அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு யோசனையை கூறிக் கொண்டே இருப்பேன். 

‘இதை அப்படி செய்யலாம், இந்த மாதிரி முயற்சித்து பார்த்தால் நன்றாக இருக்கும்’ என்றெல்லாம் போட்டி தொடர்பாக நிறைய யோசனைகளை தெரிவிப்பேன். சிலவற்றை நிராகரித்து விடுவார். சில யுக்திகளை ஏற்றுக்கொண்டு அது பற்றி விவாதிப்பார்.

இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து எனது செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து கொண்டே இருப்பார். இதன் மூலம் தனக்கு பிறகு கோஹ்லியால் தலைமைப் பதவியில் சிறப்பாக செயற்பட முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்பட்டது. 

நானும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ‘தோனி விலகி விட்டார்,  அணியின் அடுத்த தலைவர் நீங்கள் தான்’ என்று  அணித் தெரிவாளர்கள் திடீரென சொல்வது போன்ற சம்பவம் எனக்கு நடந்து விடவில்லை. 

6-7 ஆண்டுகள் எனது நடவடிக்கைகள், வளர்ச்சியை கவனித்துத்தான்  அணித்தலைமைப் பொறுப்புக்கு என்னை தோனி பரிந்துரை செய்துள்ளார். எனவே, இந்திய அணித்தலைமை பதவிக்கு நான் நியமிக்கப்பட்டதில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு” என்றார்.