ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் சுயசரிதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது.

இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களின் சுயசரிதை திரைப்படமாக தயாராகியிருக்கிறது. 

அத்துடன் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்பாளிகள் அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். 

இந்த வகையில் பளு தூக்கும் போட்டியில் அதிலும் குறிப்பாக 54 கிலோ உடல் எடை பிரிவில் பல சர்வதேச பட்டங்களையும், ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தையும் பெற்ற இந்திய வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்பட தயாராகவிருக்கிறது.  

இந்திய பெண்களுக்கு மட்டுமல்லாமல் உலகளவில் பெண்களுக்கு முன்னுதரானமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படமாக உருவாகிறது. 

இதனை சஞ்சனா ரெட்டி என்ற பெண் இயக்குநர் இயக்கவிருக்கிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கோனா வெங்கட் திரைக்கதை எழுதி தயாரிக்கிறார். 

இவருடன் எம் வி வி சத்யநாராயணா என்ற பிரபல தயாரிப்பாளரும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி, சச்சின்டெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீராங்கனைகளான போகத் சகோதரிகள், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் என இந்திய திரையுலகில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகி, பெரிய வெற்றிப் பெற்றிருக்கிறது. 

அந்த வகையில் இந்த கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றுபடமும் வெற்றிப் பெறும் என்கிறார்கள் திரையுலகினர்.