(எம்.எம்.சில்வெஸ்டர்)

இந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளமாக விளங்கும் பாடசாலை கிரிக்கெட்டை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும்  நோக்கத்துக்காக கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 45 கோடியே 90 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியை (459,050,000) ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் செலவிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு 7 ...

இலங்கை பூராவுமுள்ள பாடசாலைகளின் கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளத்தை கட்டியெழுப்புதல், வெவ்வேறு  வயதுப் பிரிவினர்களுக்கான பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்தல், மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டித் தொடர்கள், 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியினருக்கான போட்டித் தொடர்கள்,  பாடசாலை கிரிக்கெட்டை கொண்டு செல்வதற்கான நிர்வாகச் செலவு ஆகியவற்றுக்காக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு செலவிட்டுள்ளது.

கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை கிரிக்கெட்டுக்கு சிறந்த அடித்தளம் மற்றும் பாடசாலை கிரிக்கெட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்காக 23 கோடியே 21 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் 19 மற்றும் 15 வயது பிரிவுகளுக்கு உட்பட்ட தேசிய மற்றும் சர்வதேச மட்ட கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பாடசாலை கிரிக்கெட்டுக்கான நிர்வாகச் செலவுகளுக்காக 22 கோடியே 69 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.