இலங்கை சுதந்திரம் அடைந்த கையோடு அரசாங்கத்தின் பெரும்பாலான உயர் பதவிகளில் தமிழர்களே இருந்தனர். இதற்குப் பிரதான காரணம், தமிழ் மக்கள் தமது மூலதனமாக கல்வியையே கொண்டிருந்தனர்.

 அன்றைய அரசும் இதனை நன்கு உணர்ந்திருந்தது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் அன்றைய அரசு முனைப்புக் காட்டியது. 

இதேவேளை வடக்கில் அரசியல் ரீதியாக விழிப்புணர்வும் தீவிரமடைந்திருந்தபோது, தமிழ்த் தலைவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையால் சிங்களத் தலைமைகள் சீற்றத்துக்குள்ளாகி இருந்தன. 

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்தது. இதன் பின்னணியில் தனிநாடு கோரி போராட்டத்தை ஆரம்பித்திருந்த, தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அதற்கு பேராதரவு தந்த தமிழ் மக்களினதும் அரசியல் வலிமையை பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டமும் அன்று ஆட்சி செய்த ஜே.ஆர். ஜெயவர்தனவிடம் இருந்தது. 

இதேவேளை தமிழர்களின் கல்வி மற்றும் அரசியல் விழிப்புணர்வை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கியதையடுத்து பேரினவாத சக்திகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டன.

 அந்த வகையில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தது .

 அதேவேளை ஆயுதமேந்திய இளைஞர்களால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர் . ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்நிலலையில் அரச வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்று  கூறப்பட்டவர்களால் யாழ் நகரம் பெரும் தாக்குதலுக்கு இலக்கானது. வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன. ஈழநாடு பத்திரிகை நிறுவனம் எரிக்கப்பட்டது.

இதேவேளை தெற்காசியாவிலேயே சிறந்த நூலகம் என பெருமை பெற்ற யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. 

நூலகத்தில் இருந்த பழம்பெரும் சுவடிகள் , பெறுமதிமிக்க புத்தகங்கள், பத்திரிகைகள், விலைமதிப்பற்ற ஆவணங்கள், சந்தனப்பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள், மூலிகை மருத்துவக் குறிப்புகள், இலங்கை மற்றும் தென்னிந்திய பழமை வாய்ந்த இலக்கியங்கள் , வரலாற்றுப் பதிவுகள், ராமாயண, மகாபாரத மூலங்கள், கிடைத்தற்கரிய புத்தகங்கள் யாவும் எரித்து நாசமாக்கப்பட்டன.

சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் இந்த வெறியாட்டத்தில் நாசமாக்கபட்டன . இச் சம்பவம் இடம்பெற்ற போது யாழ் மாவட்ட சபைத் தேர்தலை கவனிப்பதற்காக, அங்கு வருகை தந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர் பிரசன்னமாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த பேரழிவை முழு உலகமுமே கண்டித்தது மாத்திரமன்றி, காட்டுமிராண்டித்தனம் என பகிரங்கமாக விமர்சித்தது  எனினும் அன்றைய அரசோ அமைச்சர்களோ இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

வருடங்கள் பல உருண்டோடிய நிலையில், யாழ் நூலகம் மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள போதிலும், கடந்த 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இத் துயரச் சம்பவம் இலங்கையின் கறைபடிந்த வரலாறாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்