இரத்மலானை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மற்றுமொருவர் சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரஸ்ஸ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அறிவித்துள்ளது.

இரத்மலானை பகுதியில் உள்ள ஹோட்டலொன்றின் மீது கடந்த 19 ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டு ஒருவரை காயப்படுத்தியமை மற்றும் அதே வர்த்தக நிலையத்தில் கடந்த 28 ஆம் திகதி துப்பாக்கி பிரயோகம் நடாத்தி தப்பிச் செல்வதற்கு உதவி புரிந்தமை தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இரத்மலானை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த மே 30 ஆம் திகதி இரவு அங்குலான – மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி தெஹிவளை- கல்கிஸ்ஸை நகர சபையின் உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், 2017 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான இரத்மலானை ரோஹா என்பவரை கொலை செய்ய முயற்சித்திருந்தவர் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்கேநபரிடமிருந்து கையடக்க தொலைபேசியொன்றும் சிம் அட்டையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி இரத்மலானை – சொய்சாபுர ஹோட்டலுக்கு சென்ற அடையாளந் தெரியாத சிலர், தன்னியக்க துப்பாக்கியின் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற நிலையில், தற்போது 2 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.