கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே குறித்த சம்பவத்துடன் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீட்டுத் திட்டமொன்றில் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 39 வயதுடைய நபரொருவரே படுகாயமடைந்துள்ளதாகவும் குறித்த நபர் பிரபல பாதாள உலகத்தலைவரின் சகா என பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பாதாள உலக கோஷ்டியினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் பகைமையின்  விளைவே குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.