(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா என இன்று உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று  பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய  திறந்த மன்றில் அறிவித்தார்.

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்று 10 ஆவது நாளாக பரிசீலனைக்கு வந்தது. பிரதம நீதியர்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான  விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்  கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்பே இம்மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன.

 இந்நிலையில் நேற்றைய 10 ஆம் நாள் பரிசீலனையின் போது, மனுதாரர் சார்பிலான பதில் வாதங்களும், தேர்தல்கள் ஆணைக் குழுவின் சார்பிலான விஷேட விளக்கமும் மன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் பரிசீலனைகள் நிறைவுக்கு வந்தன. அதன்படியே இம்மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என இன்று அறிவிப்பதாக பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய அறிவித்தார். 7 மனுதாரர்களின் வாதங்கள்,  சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வாதங்கள், 15 இடையீட்டு மனுதாரர்களின் வாதங்கள் இந்த பரிசீலனையின் போது உயர் நீதிமன்றினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

 நேற்றைய  தினம், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  இந்திகா தேமுனி டி சில்வா, விஷேட  அனுமதியின் பேரில் விடயம் ஒன்றினை முன்வைத்தார். அதாவது சுகாதார பாதுகாப்புடன் தேர்தலை நடாத்துவது குறித்த சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்கள் தயாரிக்கும் பணிகள்  நிறைவுபெற்றுள்ளதாகவும், இவ்வார இறுதிக்குள் அதனை வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

 இந்நிலையிலேயே,  கடந்த நாட்களில், தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள், 15 இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதில் வாதங்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆரம்பித்தார். அவரது வாதம் சுமார் 4 மணித்தியாலங்கள் வரை நீடித்தது.  ஜனநாயகத்தின் பாதுகாப்பு, சட்டத்தின் மீதான ஆட்சி மற்றும் அரசியலமைப்பின் தன்மையை பாதுகாத்தல்  ஆகிய மூன்று விடயங்களை மையப்படுத்தி உயர் நீதிமன்றம் இம்மனுக்களை அனுக வேண்டும் எனவும், ஜனாதிபதியின் எதேச்சதிகார நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் மீள் திருத்தம் செய்யலாம் எனவும்  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்  குறித்த பதில் வாதத்தில் சுட்டிக்காட்டினார்.

இன்று 2 ஆம் திகதியுடன் ஜனாதிபதி கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளியிட்ட   பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி பிரகடனம் காலாவதியாவதாக சுட்டிக்காட்டிய அவர், மூன்று வர்த்தமானி அறிவித்தல் பிரதிகளைக் கொண்டு அதனை தெளிவுபடுத்தியுடன், இன்றைய தினம் முதல்,  தேர்தல் திகதி,  புதிய பாராளுமன்றம்  கூடும் திகதி ஆகியன  தொடர்பில் திகதியில்லாத பிரகடனமாகவே அது அமையும் எனவும், அவ்வாறான பின்னனியில் அவ்வாறான பிரகடனம் ஒன்றுக்கு சட்ட வலு உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

'  இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பிலும் ஏனைய பிரதிவாதிகள் சிலர் சார்பிலும் அடிப்படை ஆட்சேபனைகள் சில முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று மனுக்கள், உரிய கால எல்லையை கடந்த பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதாகும். அவ்வாறில்லை. இம்மனுக்கள்  அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்ய வல்ல கால எல்லையை ஒரு போதும் தாண்டவில்லை.  ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைத்த பிரகடனம், தேர்தல்கள் ஆணைக் குழுவின் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நிர்ணயித்த பிரகடன்ம் ஊடாக இன்றும்  அடிப்படை உரிமை மீறப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அது தொடர்கிறது.  அதனால் அந்த ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.( பல வழக்குகளின் தீர்ப்புக்களை ஆதாரம் காட்டி வாதம் ).

அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் செயற்பட பூரண அதிகாரம் உயர் நீதிமன்ரத்துக்கு உள்ள நிலையில்,  மனுக்கள் சட்ட அடிப்படையற்ற விதத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை உறுதி செய்ய அவர்கள் ரீட் மனுக்களின்  மூலங்களை  உதாரணங்களாக கொண்டுள்ளனர். எனினும் இவை அடிப்படை உரிமை மீறல் மனுக்கள். இவை பரந்தது. சட்ட அடிப்படையின் பிரகாரமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  வேட்புமனு தாக்கல் செய்த அனைவரையும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட வேண்டும் என ஒரு தர்க்கம் முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும்  வேட்பு மனு தாக்கல் செய்த 7000 இற்கும் அதிகமானோரின் பெயர்கள் இதுவரை வர்த்தமானி பிரகடனத்தில் வெளியிடப்படவில்லை. அவ்வாறான சூழலில் அது சாத்தியமில்லை. அத்துடன் அடிப்படை உரிமை மீறல் மனுக்களில், அனைத்து பிரதிவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்று இல்லை. அதற்காகதான் சட்ட மா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்படுகின்றார்.

 இங்கு நான், இடையீட்டு மனுதாரர்களின் பல வாதங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. அவர்களது பெரும்பாலான வாதங்கள் அரசியல் ரீதியானது. சட்ட அடிப்படைக்கு அப்பால் பட்டது. எனவே நான் சட்ட ரீதியிலான விடயங்களுக்கு மட்டும் பதிலளிக்கின்றேன். இங்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கொரோனாவை வெற்றிகரமாக முறியடித்தாரா இல்லையா என்பதெல்லாம் தேவையற்ற விடயம். இது அடிப்படை உரிமை மீறல் குறித்த மனு. எனவே அது குறித்த ஆராயப்படல் வேண்டும்.

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தல், கலைத்தல் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மீது கவனம் செலுத்துங்க்ள். 3 மாதங்களுக்கு மேல் பாராளுமன்றம்  கூடாமல் இருக்க முடியாது.

 பாராளுமன்றம் என்பது எப்போதும் உயிரோட்டதுடன் இருக்கும் ஒரு இடம்.  அதனை கலைப்பது என்பதன் பொருள்,  அந்த சபைக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்தல் என்பதாகும். மாற்றமாக பாராளுமன்ற செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவது அதன் பொருளாகாது. பாராளுமன்றம் பீனிக்ஸ் பறவையை ஒத்தது. அதற்கு இறப்பு இல்லை.

 அப்படியானால், முன் கூட்டிய  தேர்தல் ஒன்றுக்காக  கலைக்கப்பட்ட பாராளுமன்றத்துக்கு 3 மாதங்களுக்குள் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாராளுமன்றம் கூடவில்லை என்றால்,  தானாகவே கூடும். அதாவது ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் அதிகாரம் உள்ளது.  எனினும்  2 மாதங்களுக்கு மேல் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க முடியாது. அவ்வாறு 2 மாதங்கள் நிறைவுற்றதும் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்காமலே பாராளுமன்றம் கூடும்.  பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் அதற்கான அதிகாரம்  சபாநாயகருக்கு உள்ளது.

 இங்கும் அப்படித்தான், 3 மாதங்களில் புதிய பாராளுமன்றம் கூடவில்லை என்றால், பழைய பாராளுமன்றத்துக்கு கால அவகாசம் உள்ளதால் தானாக அவர்கள் கூடலாம் என்பதே எனது நிலைப்பாடு.

இங்கு சில சட்டத்தரணிகள் வாதிடும் போது, பாராளுமன்றத்தை சட்டம் இயற்றும் நிறுவனமாக மட்டும் காட்ட முற்பட்டனர். அதனால் ஜனனாதிபதிக்கு சட்டம் வகுக்க வேண்டிய அவசர சூழல் ஏற்பட்டாலேயே, கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும் என அவர்கள் வரை விளக்கம் கொடுக்க முற்பட்டனர்.

 பாராளுமன்றம் என்றால் என்ன, அதன் பணிகள் என்ன? சட்டம் இயற்றுவது மட்டும் பாராளுமன்றத்தின் வேலை இல்லை. பொது நிதி முகாமை, பொது நிர்வாக மேற்பார்வை,  அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணித்தல், கேள்வி எழுப்புதல் உள்ளிட்ட வேலைகள் பாராளுமன்றத்துக்கு உள்ளது.

 அதனாலேயே ஜனவரி 24 ஆம் திகதி கொரோனா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவித்தலையடுத்து, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுகாதார அமைச்சரிடம் அது குறித்து கேள்விகளை எழுப்பினார்.

 அரசியலமைப்பின் 150 /3 ஆம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு பொதுச் சேவைகள் தொடர்பில் செலவினக்களை மட்டுமே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போது செய்யலாம். அதனால் தான் நாம் பாராளுமன்றத்தை கூட்டி தற்போதைய நிலைமையை சீர் செய்வதற்கான நாட்டை ஸ்திரமாக கொண்டு செல்லத்தக்க வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்கின்றோம்.

 அதற்காக 7 அரசியல் தலைவர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கொடுத்த கடிதத்தை இங்கு ' டீல் ' என சட்டத்தரணி ஒருவர் வர்ணித்தார். அது டீல் அல்ல. அது தான் சமூக பொறுப்பு. கூட்டுப் பொறுப்பு.

 பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டங்கள் கடுமையாக்கப்படல் வேண்டும் என கோரினர். எம்மிடம் உள்ள தனிமைப்படுத்தல் சட்டம் 123  வருடங்கள் பழைமையானது. அதனை திருத்தி நடைமுறைக்கு சாத்தியமான சட்டத்தை உருவாக்க பாராளுமன்றம் கூட வேண்டும்.

 எனினும் யார் எதை கூறினாலும், அவ்வாறான அவசர நிலைமை ஒன்று தமக்கு தென்படவில்லை என ஜனாதிபதி எதேச்சதிகாரமாக செயற்படுவாராக இருப்பின், அதனை  அடிப்படை உரிமைகள் தொடர்பில் தீர்மானமிக்க இந்த மன்றம் மீள் திருத்தம் செய்யலாம்.

 இங்கு கொரோனாவை கட்டுப்படுத்தவென ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படுகின்றது. மக்களின் நடமாட்டம் ஒரு அடிப்படை உரிமை. அதனை கட்டுப்படுத்துவதாக இருப்பின் சட்ட ரீதியாக அதனை செய்ய வேண்டும்.  இங்கு ஊரடங்கு சட்ட ரீதியாக அமுல் செய்யப்படுவதாக எந்த ஆவணமும் இதுவரை இல்லை.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய கடிதம் ஊடக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கடிதங்கள் எழுதி சட்டங்கள் போட முடியாது.  வடிவேலு எதிர் பொலிஸ் பொறுப்பதிகாரி தாம்பரபுரம் வழக்கில் அது முகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

 கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி குறித்த வழக்கை எடுத்து நோக்குங்கள். இந்த நீதிமன்றின் 7 நீதியரசர்கள் கொன்ட குழு அளித்த தீர்ப்பு அது. அங்கு பரிசீலனைகள் ஒன்றரை நாளில் நிறைவுற்று இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டவுடன் பாராளுமன்றம் கூடியது. முழுமையான தீர்ப்பு ஒரு மாதத்தில் வழங்கப்பட்டது.

 அதனை ஒத்த விடயமே, அதாவது ஜனாதிபதியின் பிரகடனத்தை சவாலுக்கு உட்படுத்திய விடயமே இங்கும் உங்கள் முனனுள்ளது.  எனவே நாம் கோரும் இடைக்கால நிவாரணங்களை வழங்கி இம்மனுக்களை விசாரணைக்கு ஏற்கவும் என' கோரினார்.

 இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான விரான் கொரயா, சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முழுமையாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வாதத்தை ஏற்றுக்கொண்டதுடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்னம் அவ்வாதங்களை  தன் சார்பிலும் ஏர்றுக்கொள்ளுமாறு கூறி மேலதிகமாகவும் சில விடயங்களை முன்வைத்தார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட்டும் தனியாக பதில் வாதம் முன்வைத்தார்.

 இதனையடுத்து  தேர்தல்கள் ஆணைக் குழு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்  தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு காரணத்தை முன்வைத்ததுடன், தேர்தல்கள் ஆணைக் குழு அரசியல் அமைப்பை மீறவில்லை எனவும், அரசியலமைப்பு நெருக்கடி நிலைமையை அவதானித்து உயர் நீதிமன்றை நாடுமாறு ஆணைக் குழு கோரிய போதும் ஜனாதிபதி செயலர் அதனை செய்யவில்லை என சுட்டிக்காட்டினார்.

 இதனையடுத்தே பரிசீலனைகள் நிறைவுக்கு வந்தன.