(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபங்கள் இருப்பின் அதனை ஒரு வாரத்துக்குள் முன்வைக்குமாறு உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் இன்று உத்தரவிட்டது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத  தன்னை கைது செய்தமை, தடுப்புக் காவலில் வைத்துள்ளமையால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி  சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக  தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு நேற்று நீதியரசர்களான எல்.பி.டி.தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன,  மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்த போதே நீதியர்சர்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

அத்துடன் முன்வைக்கப்படும் ஆட்சேபங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட  எதிர் ஆட்சேபங்களை அந்த திகதியிலிருந்து ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கவும் உயர் நீதிமன்றம் மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி இதுவரை மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சட்டத்தரணிகளின் சேவையைப் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்படும் போதும் கைது செய்யப்படுகின்றமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்படவில்லை எனவும்  சுட்டிக்காட்டியும், அவரை நீதிவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர் செய்ய உத்தரவிடுமாரும் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த அடிப்படை உரிமைமீறல் மனுவில், சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் , பிரதான பொலிஸ் பரிசோதகர்  கருணாதிலக உள்ளிட்ட  06 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் குறித்த மனு விசாரணைக்கு வந்த போது, சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே, சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட் ஆஜரானார்.

ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, அவரின் உறவினர்களால் ஏற்கனவே  இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள்  மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே , உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.