அறிமுக இயக்குனர் சபரிநாதன் முத்துபாண்டியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சின்னஞ்சிறு கிளியே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

செண்பா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சு.செந்தில்நாதன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சின்னஞ்சிறு கிளியே’. இப்படத்தில் ‘மருது’ பட புகழ் மலையாள நடிகை குலப்புள்ளி லீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். பாண்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, மஸ்தான் காதர் என்ற இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவருக்கும், மருத்துவ ஊழியருக்கும் இடையே மகப்பேறு தொடர்பாக எழும் பிரச்சனைகளை மையப்படுத்திய இந்த கதையை எழுதி, இயக்குநராக அறிமுகமாகிறார் இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். விரைவில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப் படத்தின் தலைப்பான ‘சின்னஞ்சிறுகிளியே’ என்ற பெயரில் 1980 ஆம் ஆண்டில் ஒரு திரைப்படம் தமிழில் வெளியாகி இருக்கிறது என்பதும், இதே பெயரில் தற்போது மூத்த நடிகையான சுகாசினி மணிரத்தினம் ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.