(செ.தேன்மொழி)

தொற்றுநீக்க சட்டத்திற்கு புறம்பாக மறைந்த அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார , அரசாங்கம் தொண்டமானின் மரணத்தை பயன்படுத்தி பெருந்தோட்ட மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தாலும் அது சாத்தியமாகாது என்றும், அவரது இறுதி நிகழ்வில் போலி அனுதாபத்தை தெரிவித்ததை விட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவம் படுத்தும் தலைவர் என்பதை அனைவரும் அறிவார்கள் . நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதன் காரணமாக தற்போது தொற்று நீக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் மற்றும் நபர்களுக்கிடையில் இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டத்திட்டங்கள் நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரி செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அமைச்சர் தொண்டமானின் மரணத்தில் மாத்திரம் செயற்படுத்தப்படாமைக்கான காரணம் என்ன?

வைரஸ் பரவலை அடுத்து எத்தனையோ பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருக்கும் தொற்றுநீக்க விதிமுறைக்கமையவே இறுதி கிரியைகள் செய்யப்பட்டன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் இருக்கின்றனர் அவர்களுக்கு இந்த மரணநிகழ்வில் கலந்துக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

வெளிநாடுகளிலிருந்து வரும் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதன் பின்னரே அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். ஆனால் தொண்டமானின் மகள் மாத்திரம் வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாகவே தந்தையின் மரணநிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளார்.

இவர்கள் நாட்டின் சட்டத்திற்கு உட்பட மாட்டார்களா? பௌத்தர்கள் விகாரைக்குச் செல்ல முடியாது, எந்த சமயத்தவரும் அவர்களது வழிபாட்டு ஸ்தலங்கலுக்குச் செல்ல முடியாது மக்கள் ஒன்றுக்கூடுவதே தடைச் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அனைவரும் தொற்று நீக்க சட்டத்திற்கமைய செயற்படுகையில் தொண்டமானின் குடும்பத்திற்கு மாத்திரம் ஏன் அந்த சட்டம் செயற்பட வில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொண்டமானின் இறுதிகிரியையில் கலந்துக் கொண்டு கண்ணீர் விட்டு அவரது அனுதாபத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் உண்மையாகவே தொண்டமானின் வேண்டுகோளுக்கு மதிப்பளிப்பவர் என்றால் ஐந்து நாட்கள் தொண்டமானின் சடலத்தை ஊர் ஊராக எடுத்துச் செல்வதை விடுத்து , பெருந்தோட்டதுறை தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்க வேண்டும். இது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும். அதனை நிறைவேற்றுவதற்கு அனுதாப உரையாற்ற வேண்டிய தேவையில்லை.

முஸ்லீம் மக்கள் தங்களது சமூகத்தைச் சேர்ந்வர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களை தமது சமயமுறைக்கமைய புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். தொற்று நீக்க விதிமுறைக்கமைய ஏனைய முஸ்லீம் நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் புதைக்கப்பட்டு வருகின்றமையினால் தமக்கும் அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டபோது , அரசாங்கம் அதனை துளியளவேனும் கவனத்திற் கொள்ளவில்லை.

இதனூடாக முஸ்லீம் மக்கள் மீதான பழியை தீர்த்துக் கொண்டுள்ள அரசாங்கம் , தொண்டமானின் மரணத்தை பயன்படுத்தி பெருந்தோட்ட மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது. ஏன் என்றால் பெருந்தோட்ட மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். இதுவும் சாத்தியமாகாது , ஏன் என்றால் பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவம் படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் போன்றோர் எம்முடனே இணைந்துக் கொண்டுள்ளனர்.