(இரா.  செல்வராஜா)

குருநாகல் மாவட்டத்தில்  மாவதகம பகுதியில் பரவி வரும் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான  கிருமிநாசினியை  உடன் கண்டுப்பிடிக்குமாறு  விவசாய திணைக்கள  பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யூ. வீரகோன் பேராதெனிய  விவசாய  ஆராய்ச்சி  நிலையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குருநாகல் மாவத்தகம பகுதியில் கடந்த சில  நாட்களாக  ஒருவகை  வெட்டிக்கிளிகள்   பயிர்களை நாசம்செய்து வருகின்றன. தென்னை, வாழை, சோளம், மரவள்ளி,  மற்றும் பப்பாசி போன்ற  பயிர்கள்  இந்த  வெட்டுக்கிளி தாக்கத்தினால்  அழிந்து வருகின்றன.

வடமேல்  மாகாண விவசாய   திணைக்கள  பணிப்பாளர்  டபிள்யூ. ஏ. சிலரத்ன திணைக்கள உயர்  அதிகாரிகளுடன் அப்பிரதேசத்திற்கு சென்று   கண்காணித்தார்.    இந்த  வெட்டுக்கிளியை அழிப்பதற்காக ஒரு வகை  கிருமிநாசினி  தெளிளிக்கப்பட்டது. எனினும்  அந்த  வெட்டுக்கிளிகள்   இறக்காமல் உயிருடன் இருந்தது அவதானிக்கப்பட்டன.

அத்துடன் வெட்டுக்கிளிகள் சில   பிடிக்கப்பட்டு  பேராதெனிய      விவசாய  ஆராய்ச்சி  நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளன.

இதற்கிடையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஒரு  வகை  வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால்   இதனை  அழிப்பதற்கான ந்டவடிக்கைகளை  அம்மாநிலங்கள்  துரிதமாக எடுத்து வருகின்றன.

தற்போது இலங்கையில் பரவி உள்ள  வெட்டுக்கிளிகளை இந்நியாவிற்கு அனுப்பி  பரிசோதனை நடவடிக்கைகளை எடுக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வெட்டுக்கிளிகளை  உடன் அழிக்காவிடின்  ஒரு  சில  நாட்களில் இவை 500 மடங்காக பெருகி விடும் என  வடமேல்  மாகாண விவசாய  பணிப்பாளர்  தெரிவித்தார்.

தென்னாபிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா, உகண்டா மற்றும் தன்சானியா போன்ற  நாடுகளில்  வெட்டுக்கிளிகளின்  தாக்கத்தினால்  பயிர்கள் அழிந்து அந்நாடுகள் பெரும் பஞ்சத்தை  எதிர் நோக்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.