இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் சங்கத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு புகார் அளித்துள்ளார்.

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மூத்த நடிகர் மனோபாலா சொந்தமாக இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். 

இந்த இணையதளத்தில் நடிகர் சிங்கமுத்துவை சந்தித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் அவர் வடிவேலுவை பற்றி கேள்விகள் கேட்க, அதற்கு சிங்கமுத்து பதிலளித்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 19ஆம் திகதியன்று வடிவேலு நடிகர் சங்கத்திற்கு சிங்கமுத்து, மனோபாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். 

அந்த கடிதத்தில்,“ நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக இருக்கிறேன். மேலும் நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். 

நடிகர் மனோபாலா நடத்தும் ‘வேஸ்ட் பேப்பர்’ என்ற யூடியூப் சேனலில் மனோபாலா, என்னை பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப்பற்றி தரக்குறைவாகவும், தவறான செய்திகளையும், பொய்ப் பிரச்சாரங்கள் செய்து பதிலளித்திருக்கிறார்.

இந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உறுப்பினர்களாகயிருக்கும் வாட்ஸ்அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளேன். 

ஏற்கனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும், சிங்கமுத்துவிற்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் 13 யின்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வைகைப்புயல்’ வடிவேலு மனோபாலா மீது புகார் அளித்திருப்பது திரைப்படத்துறையில் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.