(செ.தேன்மொழி)

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபான மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 697 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிவரை இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதன்போது கொழும்பு ,கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் 304 பேரும், ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 213 பேரும் , கஞ்சா , ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 180 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு மத்தியில் சட்டவிரோத கடத்தல்கள் அதிகரித்துள்ளதனால், இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸ் தலைமையகம் , போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. 

அதற்கமையவே இந்த சுற்றிவளைப்பும் இடம் பெற்றுள்ளதுடன் , சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கடந்தமாதம் 26 ஆம் திகதியிலிருந்து இதுவரையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.