(எம்.மனோசித்ரா)

நாடு தற்போது முகங்கொடுத்துள்ள பிரதான பிரச்சினை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் வருகை தருவதாகும்.

அதற்கமைய குவைத்திலிருந்து வருகை தந்த 466 நபர்களில் 330 பேரும் , கட்டாரிலிருந்து வருகை தந்த 270 பேரில் 150 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோராவர் என்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இதனைத் தெரிவித்த அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில் ,

மே மாதமும் நிறைவடைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் சமூகத்தினுள் பரவலடையாமலுள்ளதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொரோனா ஒழிப்பிற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கிய தலைமைத்துவம் , சுகாதாரத்துறை , முப்படையினர் மற்றும் பொலிஸார் வழங்கிய சேவைகளை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூற வேண்டும்.

நாட்டு மக்கள் சுகாதாரத்துறையின் ஆலோசனைகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பின் காரணமாகவே தற்போது வைரஸ் பரவலைக் ஏதேனுமொரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது.

நாட்டில் எந்தவொரு கிராமத்திலோ அல்லது நகரத்திலோ ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றுக்குள்ளானோரை இனங்காண்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படாதளவிற்கு நாடு முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது.

நாம் தற்போது முகங்கொடுத்துள்ள பிரதான பிரச்சினை நோயாளர்களாக வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் வருகை தருவதாகும். இது வரையில் (மே 31 ஆம் திகதி வரை) 522 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

குவைத்திலிருந்து வருகை தந்த 466 நபர்களில் 330 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நாட்டை வந்தடைந்தவர்களாவர். இதே போன்று கட்டாரிலிருந்து வருகை தந்த 270 பேரில் 150 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோராவர்.

குவைத்திலிருந்து வருகை தந்த 466 பேரும் முதல் கட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் சிலர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற முடிவு கிடைத்தாலும் அவர்களில் சிலர் எதிர்வரும் நாட்களில் நோய் தொற்றுக்கு உள்ளாவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அதே போன்று கட்டாரிலிருந்து வருகை தந்த 270 பேரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 150 பேர் இது வரையில் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுதியாகியுள்ளது.

தற்போது வரை 800 இற்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். எவ்வாறாயினும் மக்கள் மத்தியில் வைரஸ் தொற்று பரவாமலிருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். வரலாற்றில் குறுகிய காலத்தில் அதிக நிதி செலவிடப்பட்டது அண்மைய காலமேயாகும்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் என்போருக்கான கொடுப்பனவிற்காக 794, 421 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 5, 071, 892 குடும்பங்கள் உள்ளிட்ட அனைத்திற்காகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 29,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டள்ளது.

ஆடை தொழிற்துறையினருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பில் கவனம் செலுத்தாமல் ஆடை தொழிற்துறை ஊழியர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரையான வரலாற்றில் ஒரு குடும்பத்திற்கு ஒரு நிவாரண உதவி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் 5000 ரூபாய் கொடுப்பனவு ஒரே குடும்பத்தில் பலருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.