(நா.தனுஜா)

தெற்காசியப் பிராந்திய நாடுகளில் பாகிஸ்தான் எரிபொருள் விலைகளை மிகவும் குறைவாக நிர்ணயித்திருக்கும் அதேவேளை, பாகிஸ்தானை விடவும் இலங்கையில் எரிபொருள் விலைகள் 50 - 75 சதவீதம் வரையில் உயர்வாகக் காணப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலால் உலகநாடுகள் பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் உலகப்பொருளாதாரமும் தளம்பலடைந்திருக்கிறது.

இதனுடன் இணைந்ததாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படும் நிலையில், தமது நாடு எரிபொருட்களின் விலைகளைப் பலமடங்கு குறைத்திருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை உள்ளிட்ட தெற்காசியப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் எரிபொருட்களுக்கு மிகவும் குறைந்த விலைகளை நிர்ணயித்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். பாகிஸ்தான் அரசாங்கம் பாகிஸ்தான் ரூபாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 7.06 ரூபாவினாலும், கெரோஸின் விலையை 11.88 ரூபாவினாலும், டீசலின் விலையை 9.37 ரூபாவினாலும் குறைத்திருக்கிறது.

'நாம் பெற்றோல், டீசல் மற்றும் கெரோஸின் ஆகியவற்றின் விலைகளைப் பெருமளவால் குறைத்திருக்கின்றோம். தற்போது ஏனைய தெற்காசியப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் மிகக்குறைவான எரிபொருள் விலைகளைக் கொண்டிருக்கிறது. எனினும் எமது நாட்டின் எரிபொருள் விலைகளை விடவும் இருமடங்காக இந்திய எரிபொருள் விலை நிர்ணயம் காணப்படுவதுடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பாகிஸ்தானை விடவும் 50 - 75 வரையில் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பொன்று காணப்படுகின்றது' என்று பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.