உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட  இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் இன்று இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்  விசா பிரிவில் பணியாற்றிய இவர்கள் உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.

இவ்விரு அதிகாரிகளும் வாகா எல்லைக்கு ஊடாக இன்றைய தினம்  பாகிஸ்தானுக்குத் திரும்பினர் என பாகிஸ்தான் தூதரக பேச்சாளர் ஒருவர் ஏ.எவ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் வருவதற்கும், இந்தியாவில் தங்குவதற்கும் நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 16 பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை ரகசியங்களை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்காகத் திருடியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்ததை பாகிஸ்தான் மறுத்தது.

எனினும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு 4 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் இருவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில்,

“இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியான உறவுகளை மேலும் சீர்குலைக்கும் விதமாக இந்தியாவின் செயல் இருக்கிறது.

இந்தியாவின் ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம். இந்தியாவின் செயல்பாடு முழுவதும் வியன்னா தீர்மானத்துக்கு எதிராக இருக்கிறது” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.