அமெரிக்காவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸ் விசாரணையில் ஜோர்ஜ் பிளாய்ட்டின் கழுத்தை பொலிஸார் முழங்கால் நெருக்கிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த 27 ஆம் திகதி  அமெரிக்காவில் மின்னபொலிஸ் பகுதியில் உள்ள வீதியில் இந்த சம்பவம் நடந்தது.

இதனால் அமெரிக்காவில் உள்நாட்டு போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீனாவை சேர்ந்த அதிகாரிகள் பலர் டுவிட் செய்து வருகிறார்கள்.

அதில் சீன அரசுக்கு நெருக்கமான பத்திரிகையான தி குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஹு அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் சமத்துவமற்ற குழப்ப நிலைமை இருக்கிறது.

ஜனாதிபதி ட்ரம்ப் அங்கு போராட்டங்களை பார்த்து பயந்து ஒளிந்து கொண்டார். அவர் இப்படி ஒளிந்து கொள்வது தவறு. உடனே ட்ரம்ப் பங்கரில் இருந்து வெளியே வர வேண்டும். அவர் நேரடியாக சென்று போராட்டக்காரர்களிடம் பேச வேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும். பாதுகாவலர்களுக்கு பின்னால் அவர் ஒளிந்து கொள்ள கூடாது.

ஹொங்கொங்கில் போராட்டம் நடந்த போது அமெரிக்கா அதை விமர்சனம் செய்தது. எங்கள் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட்டது.

இப்போது ஹொங்கொங் போராட்டம் போலவே உங்கள் நாட்டில் ஒரு போராட்டம் நடக்கிறது. போய் பேசுங்கள். இப்படி ஒளிந்து கொள்ளாமல் பேசுங்கள். சீனாவிற்கு கொடுத்த அறிவுரையை நீங்கள் உங்கள் நாட்டில் பின்பற்றுங்கள் என்று ஹு கூறியுள்ளார்.

சீனாவில் கடந்த ஒரு வருடமாக ஹொங்கொங் போராட்டம் நடந்து வருகிறது. முன்பு நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராகவும் , தற்போது புதிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

இதை அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஹொங்கொங் நாட்டின் உரிமையை சீனா பறித்துவிட்டது என்று அமெரிக்கா தொடர்ந்து புகார்களை அடுக்கி வருகிறது.

இந்த நிலையில் ஹொங்கொங் போராட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கன் கருத்து தெரிவித்து இருந்தார்.

ஹொங்கொங் நாட்டில் சீனா வன்முறையை தூண்டுகிறது. அங்கிருக்கும் மக்களை ஒடுக்குகிறது என்று கூறி இருந்தார். இதை பகிர்ந்து சீனாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹுவா சுங்யிங், ''என்னால் மூச்சு விட முடியவில்லை'' என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் ஜோர்ஜ் கொலை செய்யப்பட்ட போது, இதேபோல் என்னால் மூச்சு விட முடியவில்லை என்று கூறினார். அவர் தனது மரணத்திற்கு முன் கூறிய கடைசி வார்த்தைகள் இதுதான்.

தற்போது அதை வைத்து சீனா அமெரிக்காவை நெருக்கி வருகிறது. சீனா அமெரிக்கா இடையே ஏற்கனவே கொரோனா காரணமாக பிரச்சனை உள்ள நிலையில் தற்போது இந்த புதிய விமர்சனங்கள் காரணமாக சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது.