விடைபெற்றார் ' தலைவர்" : நீங்கள் அறியாத உண்மைகள் : விசேட தொகுப்பு

01 Jun, 2020 | 11:26 AM
image

- எம்.டி.லூசியஸ்

ஒழு குழந்தை இறக்கும் போது தாயுள்ளம் கதறும்..

ஒரு தந்தை உயிரிழக்கும் போது குடும்பமே புலம்பும்...

ஆனால்..! ஒரு உண்மையான தலைவன் மரணிக்கும் போது மாத்திரம் தான்  ஊரே அழும்....

அவ்வாறு ஆளுமை மிக்க, துணிச்சலான தலைவரை இழந்து மலையகமே இன்று கண்ணீரால் நனைந்துகொண்டிருக்கின்றது.

ஆம்..! மலையக அரசியல் வரலாற்றில் என்றும் மறவாத மா மனிதராகவும் மக்கள் தொண்டனாகவும் விளங்கினார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

ஆறுமுகன் தொண்டமான் என அறியப்படும் சௌமியமூர்த்தி ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்தார் .

மலையக மக்களின் உரிமைக்காகப் போராடியவரும், மலையகத் தந்தை என போற்றப்படுபவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன்தான், ஆறுமுகன் தொண்டமான்.

தான் குழந்தை பருவத்தில் இருக்கும் போதே அரசியல் தலைவர்களுடன் காணப்படும் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு அருகில் ஒன்றும் அறியாத குழந்தையாக நிற்கும் ஆறுமுகன் தொண்டமானின் புகைப்படங்கள் இன்று ம் பல வரலாற்று சான்றுகளை பகிர்வனவாக இருக்கின்றன.

இந்தியாவின் தமிழகத்தின் ஏற்காடு மொன்ட்ஃபோன்டில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்துள்ளார் ஆறுமுகன் தொண்டமான்.

அவரின் மறைவை நினைவுப்படுத்தும் வகையில் தமிழக ஏற்காடு மொன்ட்ஃபோன்ட் பாடசாலையின் பேஸ்புக் பக்கத்தில் ஆறுமுகன் தொண்டமானின் பிரிவு தொடர்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து கொழும்பு ரோயல் கல்லூரியில், பயின்றுள்ளார் ஆறுமுகன் தொண்டமான்.

பாடசாலை காலத்திலேயே பல்வேறு திறன்களும் கைவரப்பெற்ற ஒருவராக அவர் விளங்கினார்.

பிறருக்கு துன்பம், அநீதி ஏற்படுமிடத்து முந்திச் சென்று உதவுபவராக ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார் என பாடசாலை வரலாறுகள் கூறுகின்றன.

எதிர்காலத்தில் தலைவராக வரக்கூடிய ஆளுமைகள் அவரிடம் பாடசாலை காலத்திலேயே தெளிவாக தெரிந்தன.

இந்திய வம்சாவளியினருக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கியவராவார்.

பல நேரங்களில் இலங்கை அரசியலில் சூறைக்காற்று சுழற்றி அடிக்கின்ற போதும் கொஞ்சம் கூட நிதானம் தவறாமல் நடுநிலை பிறழாமல் நாட்டுக்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் பணியாற்றியதை தான் கண்டு வியந்து போனதாக சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ. சிவஞானம் வியந்துள்ளார்.

இவ்வாறு ஆளுமை கொண்ட தாத்தாவின் பாசறையில் வளர்ந்த ஆறுமுகன் தொண்டமானும் துணிச்சலுடன் தனக்கு எதிரான அனைத்து சவால்களுக்கும் தனி ஆளாக நின்று தம் மக்களுக்காக இறுதி வரை போராடியவராவார்.

தந்தையான அமரர் இராமநாதன் தொண்டமானின் ஆசிர்வாதத்துடன் தாத்தாவின் வழியில், 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து, அரசியலில் காலடி எடுத்துவைத்துள்ளார் ஆறுமுகன் தொண்டமான்.

1993ஆம் ஆண்டு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994ஆம் ஆண்டு, கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். 

1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,ஆயிரம் வாக்குகளைப் பெற்று பிரமாண்ட வெற்றியுடன் நாடாளுமன்றம் சென்றார். 

சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர், 1999-ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தாத்தாவான சௌமியமூர்த்தி தொண்டமானின் பாசறையில் வளர்ந்த ஆறுமுகன் தொண்டமான், அரசியல் சாணக்கியங்களை நுணுக்கமாக கற்றுக்கொண்டார்.

இதனைப் பார்த்த பலர் 'மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்று தமக்குள்ளே கூறிக்கொள்வதும் இன்று சான்றுகளாக இருக்கின்றன.

1999 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{க்கு முக்கியமான ஆண்டாகும்.

இந்த காலக் கட்டத்தில் கட்சியில் இருந்து பலர் விலகிச் சென்றார்கள்.

இதனோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழிந்து விட்டது என்று தான் பலரும் கனவு கண்டார்கள்.

ஆனால் அனைத்தையும் தவிடுபுடியாக்கி, இளம் வயதில் கட்சியை கட்டியெழும்பி அனைவரின் பாராட்டையும் பெற்றார் அப்போதைய இளம் சிங்கமான ஆறுமுகன் தொண்டமான்.

அவர் மரணிக்கும் வரை தேசிய அரசியலிலும் சரி, மலையக அரசியலிலும் சரி துணிச்சலான முடிவெக்க கூடிய கம்பீர மனிதராக திகழ்ந்தார்.

பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர் மலையக மக்களுக்காக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.

அரசாங்க தொழில் வாய்ப்புக்கள், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, இளைஞர் வலுவூட்டும் செயற்பாடுகள் என அனைத்து முன்னேற்ற செயற்பாடுகளை மலையக மக்கள் நலன் கருதி ஆறுமுகன் தொண்டமான் செய்திருந்தார்.

குறிப்பாக இவருடைய அரசியல் நீரோட்டத்திலேயே லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது எனலாம்.

இந்திய அரசாங்கத்துடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி வீட்டுத் திட்டங்களை மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்தார்.

 2001 ஆம் ஆண்டு  முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா குமாரதுங்கவினால் 17 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் கொண்டவரப்பட்டது. 

ஆரம்பத்தில் தமிழர்கள் சார்பாக  ஒரு பிரதிநிதியை  நியமிப்பதற்கு  முடிவு செய்யப்பட்டிருந்தது.   

எனினும்  ஆறுமுகன் அந்த இடத்தில் அரசியல் இராஜதந்திரத்துடன் செயற்பட்டார். 

 

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சார்பில்  அந்த அரசியல் யாப்பு சபையில்  ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கு ஆறுமுகன் தொண்டமான்  கடும் அழுத்தம் பிரயோகித்திருந்தார்.  

  இறுதியில் அந்த முயற்சியில் ஆறுமுகன்  தொண்டமான் வெற்றிபெற்றார்.  இது இலகுவான விடயமல்ல.  ஆனால் அதனை  லாவகமாக  ஆறுமுகன் தொண்டமான் செய்து முடித்தார். 

அதேபோன்று  1988 ஆம் ஆண்டு  முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில்  இந்திய வம்சாவளி மக்களுக்கு  பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.  

ஆனால்   இந்திய கடவுச்சீட்டினை வைத்திருந்த  மற்றும் இந்திய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த 3 இலட்சம் பேர்  பிரஜைவுரிமை அற்றவர்களாக இலங்கையில் இருந்தனர்.  

இந்நிலையில்  2003 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில்  ஆறுமுகன் தொண்டமான்  இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டார். 

 அதன்படி  குறித்த இந்திய  கடவுச்சீட்டு வைத்திருந்த  3 இலட்சம் பேருக்கும்  பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.   

இதுவும் அவரது தலைமையில் பெறப்பட்ட முக்கிய வெற்றியாக காணப்படுகின்றது.   

 

2005ஆம் ஆண்டு  மலையகத்தில்  3179 ஆசிரியர்களை ஒரே தடவையில் நியமிப்பதற்கு  ஆறுமுகன் தொண்டமான்  நடவடிக்கை எடுத்திருந்தார். 

    

  இதன்போது  தடைகள் வந்தன. எனினும் வழக்காடி  இந்த முயற்சியில் வெற்றியடைந்தார்.  

2001 ஆம் ஆண்டு   குறைந்தபட்ச சம்பளமாக  200 ரூபா வழங்கப்படவேண்டும்  என்ற கோரிக்கை  தோட்டத் தொழிலாளர்களின் சார்பில் முன்வைக்கப்பட்டது.  

எனினும் அதனை  முதலாளிமார் சம்மேளனம்  ஏற்க மறுத்ததையடுத்து  ஆறுமுகன் தொண்டமான் போராட்டத்தில் குதித்தார். 

 மல்லிகைப்பூ சந்தியில் 25 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டம்  ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதுடன்   இதில் 200 ரூபா  குறைந்த சம்பளம்  உறுதிப்படுத்தப்பட்டு  அந்தப்போராட்டம்  வெற்றிபெற்றது. 

அரசியல் தலைவர் ஒருவர்  நேரடியாக  களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியை பெற்றுக்கொடுத்த புதிய அத்தியாயத்தை  ஆறுமுகன் தொண்டமான்   ஏற்படுத்தினார். 

 

இவ்வாறு  ஆறுமுகன்  தொண்டமான்    பெற்ற வெற்றிகள்  மற்றும் முன்னெடுத்த செயற்பாடுகள் பல காணப்படுகின்றன.  

 

மறைந்த ஆறுமுகம் தொண்டமான், அடிக்கடி தமிழகம் வந்து சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்துவரும் உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். 

தமிழக அரசியல்வாதிகளிலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். 

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிகவும் ஈடுபாடுடையவர், ஆறுமுகம் தொண்டைமான். ஜல்லிக்கட்டுக் காளைகளையும் வளர்த்து வருகிறார். 

தமிழக ஜல்லிக் கட்டு பிரச்சினையின் போது பாரம்பரிய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குரல் கொடுத்திருந்தார்.

அமைச்சர் ஆறுமுகனின் ஜல்லிக் கட்டு காளைகள் களம் கண்டாலே அதற்கு தனி வரவேற்பு தமிழகத்தின் இன்றளவும் உள்ளது.

 

தனது மக்களுக்குகாக செயற்பட்ட சந்தர்ப்பங்களில் பல சேறு பூசல்கள், குழி பறிப்புகள் நிகழ்ந்தாலும் கூட விமர்சனங்களை கணக்கில் கொள்ளாது மக்கள் சேவையே மகேசன் சேவை என முன்சென்றார்.

கோபமும் குணமும் கொண்ட நபர் இன்று மலையகத்தை விட்டு பிரிந்து விட்டார்.

ஆறுமுகன் தொண்டமான் பிறந்த தினத்திலேயே இறுதி ஊர்வலம் போகிறார் என்பது மிக கொடுமையாகும்.

'என்றும் நாங்கள் உங்களுடன்" என்று மேடைகளில் ஆறுமுகன் தொண்டான் கூறுவார்.

ஆனால் அந்த மலையக மக்களுடன் இன்று அவர் இல்லை. 

ஒரு இமையம் சாய்நது விட்டது. ஒரு தலைவர் மறைந்து விட்டார்.

  கடந்த புதன்கிழமை 27 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக   தனது 55 ஆவது வயதில் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்தாலும் கூட, மலையக மக்களுக்கான இவருடைய குரல் சித்தார்ந்த ரீதியா ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

மரணிப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் கூட தனது மக்களுக்காக இந்திய தூதுவரிடம் கலந்துரையாடி இருந்ததை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

 

இவ்வாறு இறுதி மூச்சு வரை தனது மக்களுக்காக குரல் கொடுத்த இவரின் நம்பிக்கை விதைகள் என்றுமே உறங்காது என்பதே தின்னம்.

உங்களுடைய ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22