அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பல்கட்சித் தலைவர்கள் செலுத்திய அஞ்சலி அவருக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் மத்தியில் இருந்த ஆதரவையும், மலையகத்தில் அவரது செல்வாக்கையும் எடுத்துரைத்தது.

அந்த அஞ்சலியில் அவர் மலையக மக்களுக்கு ஆற்றிய பணிகளையும், இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கைக்கு அவரது பங்களிப்பு குறித்தும் தமது கருத்துக்களை அத்தலைவர்கள் பகிர்ந்திருந்தனர்.

மிக முக்கியமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை நிறுவிய அவரது தாத்தா சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களைக் குறிப்பிட்டு, இலங்கை அரசியல் சமூகச் சூழலில் `பெரிய தொண்டமான்` அவர்கள் எப்படியான பங்களிப்பைச் செய்திருந்தனர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்தனர்.

`பெரிய தொண்டமான்` அவர்களால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு, கால் நூற்றாண்டுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இருபது ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். ஆனால், இரு தொண்டமான்களையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.

அதற்கு அடிப்படையாக அவர்கள் வாழ்ந்த காலம், அந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல், சமூகச் சூழல், பொருளாதார நிலை போன்றவை முக்கியக் காரணிகள்.

இலங்கையின் மலையகப் பகுதியில், தொண்டமான்களின் ஆளுமை, நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் உள்ளது. ஆனால் யதார்த்த ரீதியில் இன்று நாட்டின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது மலையகத்தின் நிலை எப்படியுள்ளது என்பது `கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை` என்பது போலாகும்.

ஒரு செய்தியாளராக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் மலையகப் பகுதிகளுக்குப் பயணம் சென்று அங்குள்ள நிலைமைகளை நான் கூர்மையாக அவதானித்துள்ளேன். தோட்டத் தொழிலாளர்களுடன் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். அங்குள்ள அரசியல் சமூக நிலைமைகள் தொடர்பில், பலருடன் உரையாடி ஆவணப் பதிவுகளை மேற்கொண்டுள்ளேன்.

அவ்வகையில் நான் நேரில் கண்டதையும். கேள்வியுற்றதையும் இச்சந்தர்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

மலையகத்தின் பெரும்பாலானப் பகுதிகளில் ஆறுமுகன் தொண்டமான் மிகவும் அறியப்பட்டவராகவும், அஞ்சப்பட்டவராகவும், மதிக்கப்பட்டவராகவும் இருந்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

மறைந்த ஆறுமுகன் தொண்டமான் அவர்களிடம் ஒரு `ஹீரோயிஸம்` இருந்தது. தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகர்கள் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாகப் பொங்கியெழுந்து `அடிதடியில் இறங்கி, தீயவர்களை அழித்து` தமது ஆளுமையை எப்படி நிலைநாட்டுவார்களோ, அதேபோல் ஆறுமுகன் தொண்டமானும், தோட்டங்களில் எங்கு பிரச்சினை என்றாலும், தமது படை பலத்துடன், வாகனத் தொடரணியில் சென்று பிரச்சினைகளைக்குத் தீர்வு காண முயல்வார் என்று மக்கள் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால், தமிழகத்தைப் போலவே இலங்கையிலுள்ள தமிழ் மக்களும் சினிமாவும் மீதுள்ள மோகத்தால், சினிமா வேறு யதார்த்தம் வேறு என்பதை-- இங்கும் அங்கும் உள்ள மக்கள்--உணரவில்லை என்பது கசப்பான உண்மை.

தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிமையானவர் ஆறுமுகன் தொண்டமான். பேட்டி, அரசியல் முரண்பாடு, மலையக மக்களின் தீராத பிரச்சினைகள் போன்ற விடயங்கள் விவாதிக்கப்படாதவரை அவருடன் ஆறுதலாக உரையாடலாம்.

விளம்பர அரசியல் இல்லாத ஒரு அரசியல்வாதியாக இருந்தவர்  தொண்டமான். 

இ தொ கா வின் எதிர்காலம்

இந்தியாவிலுள்ள பல அரசியல் கட்சிகளைப் போல இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் ஒரு `குடும்பக் கட்சியாக` உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறிகின்றனர்.

இதன் காரணமாக அந்தக் கட்சியில் இருந்த பல மூத்த தலைவர்கள் பலர் விலகினர். இவர்களில் எம் எஸ் செல்லசாமி பி பி தேவராஜன், ஆர் யோகராஜன், முருகன் சச்சிதானந்தம், வேலுச்சாமி இராதகிருஷ்ணன், பி சதாசிவம் போன்று பலரைக் குறிப்பிடலாம்.

இ தொ க விலிருந்து பிரிந்து சென்ற சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். பின்னர் பழனி திகாம்பரம் தனியொரு கட்சியை ஆரம்பித்தார். இப்படியான பிளவுகள் மூலம் இ தொ கா வின் வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டது.

கடந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலில், அக்கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட வீழ்ச்சி தெளிவாகத் தெரிந்தது. அதன் காரணமாகக் குறைந்த அளவிலான ஆசனங்களையே பெற முடிந்தது.

எனினும் ஆறுமுகன் தொண்டமான் எனும் ஆளுமை அல்லது தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக இ தொ கா வாக்கு வங்கி குறைந்தாலும், சில இடங்களில் வென்று நாடாளுமன்றத்திலும், மாகாண சபையிலும் தமது இருப்பை நிலைநிறுத்தியது.

இப்போது கட்சியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு எனும் கேள்வி எழுந்துள்ளது. `குடும்பக் கட்சி` எனும் தொடர் விமர்சனத்துக்குள்ளாகி வரும் இ தொ கா வின் தலைவர் பதவிக்கு, தொண்டமான் குடும்பத்தில் மூத்த அரசியல் வாரிசாகவும், ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் செந்தில் தொண்டமானோ, அல்லது மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக நுவரேலியா மாவட்டத்திலிருந்து போட்டியிட பரிந்துரைக்கப்பட்ட அவரது மகன் ஜீவன் தொண்டமானோ வரக் கூடும்.

அவர்களில் ஒருவர் தலைவராகும் பட்சத்தில் அவர்களால் கட்சியை எந்த அளவுக்கு வழி நடத்திச் செல்ல முடியும்?

`பெரிய தொண்டமான்` தனது காலத்தில், தனக்கு சமமாக பல தலைவர்களைத் தன்னுடன் வைத்திருந்தார். அதன் மூலம் அவரது ஆளுமை, கட்சி மற்றும் ஆட்சியில் அவரது பிடி ஆகியவை உறுதியாக  இருந்ததன. ஆனால் ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் மூத்த தலைவர்களை உடன் வைத்துக் கொள்ளும் பண்பு இல்லாமல் போயிற்று.

அடுத்து இ தொ கா வுக்கு தலைவராக வருபவர் மலையகப் பகுதியைச் சேர்ந்த கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கும் மூத்த தலைவர்கள் ஆகியோரை அனுசரித்து, அவர்களை இணைத்துக் கொண்டு செயல்படுவதே சாலச் சிறந்ததாகும்.

அவ்வாறு அவர்கள் செய்யத் தவறினால், மாறிவரும் அரசியல் சூழ்நிலை, மாற்றுக் கட்சிகளின் பலம், மறைந்த தொண்டமான் மீதிருந்த அச்சம் மற்றும் எதிர்ப்புணர்வு காரணமாகவும், இ தொ கா வின் வாக்கு வங்கி மேலும் வீழ்ச்சியடையக் கூடும்.

பணபலம், ஆட்பலம் என்பதற்கு அப்பாற்பட்டு அனுபவம் எனும் பாடம் ஒரு கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் அவசியம். `காய் நகர்த்துதல்` அரசியலில் மிகவும் முக்கியமானது. தவறான ஒரு நகர்த்தல் பெரும் வீழ்சியை ஏற்படுத்திவிடும். மாற்று அரசியல் கட்சிகளும், இ தொ கா விலுள்ள தலைவர்களை தமது பக்கம் இழுக்க முயற்ச்சிக்கலாம்.

இதையெல்லாம் இ தொ கா வின் அடுத்த தலைமை விரைவாகவும், சாதுர்யமாகவும் கையாளாவிட்டால், அக்கட்சி காலவோட்டத்தில் கரைந்துவிடும் அபாயம் உள்ளது.

மலையக மக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்த் தலைமைகளை நம்புவதைவிட சிங்களத் தலைமைகளையே நம்பலாம் எனும் எண்ணப்பாடும் மக்களுக்கு ஏற்படக் கூடும்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஆறுமுகன் தொண்டமானின் அகால மரணத்தால் மக்களிடையே அனுதாபம் ஏற்பட்டு அதன் மூலமாக அக்கட்சிக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம். ஜீவன் தொண்டமானும் வெற்றிபெறக் கூடும். மறுபுறம், `அச்சுறுத்தும் வகையிலான` ஆளுமையையை` கொண்டிருந்த ஆறுமுகன் தொண்டமான் தற்போது இல்லாத சூழலில், அவர் மீதான எதிர்மறை உணர்வுகள் காரணமாக, மலையக மக்கள் தமது வாக்குகளை மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கும் நிலையும் ஏற்படலாம்.

அடுத்த நூறு நாட்களுக்குள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இ தொ  கா வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்தியில் ரீதியாகக் கட்சியைக் கட்டியெழுப்பும் தலைமைகள் மலையகத்தில் இப்போது உள்ளதா என்பது விடை தெரியாத வினாவாக உள்ளது. .

சிவா பரமேஸ்வரன் ---முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி