எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்

31 May, 2020 | 08:57 PM
image

-கார்வண்ணன்

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டதற்குப் பின்னர், பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே,   நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா தொற்று குறித்த தகவல்களை மறைத்து, பொதுத்தேர்தலை நடத்தக் கூடிய பாதுகாப்பான சூழல் உருவாகி விட்டதாக அறிக்கை கொடுப்பதற்காகவே, இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் முனசிங்க, ஜனாதிபதியினால் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது.

அதனை உண்மையாக்கும் வகையில் தான், சமூகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்றும், பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடத்த முடியும் என்றும் அறிக்கை கொடுத்திருக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளின் பங்கு, யாராலும் குறைத்து மதிப்பிடக் கூடியதன்று.

ஆனாலும், இலங்கையைப் பொறுத்தவரையில், சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய மதிப்பும், கௌரவமும், சீருடைத் தரப்பினால் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது என்றே கூறலாம். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் சுகாதாரத் துறையினரின் பங்களிப்பு மிக உயர்வானதாக இருந்தபோதும், இந்த நடவடிக்கைக்குள் படையினரைக் கொண்டு வந்து இறக்கியதன் மூலம், அவர்களும் பங்குதாரர்கள் ஆக்கப்பட்டனர்.

கடைசியாக சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இராணுவ அதிகாரியை நியமித்து, எல்லாவற்றையும் சாதித்தது இராணுவம் தான் என்றவாறான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறானதொரு நிலையில் தான், கொரோனா தொற்று அச்சுறுத்தல் முடிவுக்கு வர முன்னரே,  பொதுத்தேர்தலை நடத்தலாம் என்று அவசர அவசரமாக அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள், தேர்தலை இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்கின்றன. கடைசி கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பின்னரே, தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட வேண்டும்  என்பது, எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு.

ஆனால் அரசாங்கமோ, கொரோனா தொற்றாளர்கள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, தொற்று அச்சுறுத்தல் தீர்ந்து விட்டது என்ற சான்றிதழைக் கொடுத்து, பொதுத்தேர்தலை நடத்தப் பார்க்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் முற்றாக நீங்குவதற்கு ஒரு வருடமோ இரண்டு வருடங்களோ ஆகலாம் என்று கூறப்படும் நிலையில், அதுவரை தேர்தலை பிற்போட முடியுமா என்று எழுப்பப்படும் கேள்வியில் உள்ள  நியாயம் குறைத்து மதிப்பிட முடியாதது.

அதற்காக, கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அபாயம் நீங்கி விட்டது என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதை முறையானதென்று கூற முடியாது.

கொரோனா தொற்று தற்போது சமூகத்தில் இல்லை என்று கூறப்பட்டாலும், நாட்டில் முற்றாகவே அந்த அச்சுறுத்தல் நீங்கி விடவில்லை. 

கடற்படையினர் மத்தியில் இருந்து தொற்றாளர்களை முற்றாக களைய முடியாமல், திணறுகின்ற நிலை இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

முதலாவது கடற்படைச் சிப்பாய்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 10 வாரங்களுக்கு மேலாகியும், கடற்படையினர் மத்தியில் தொற்றாளர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு காரணம், கடற்படையினர் தான் என்ற குற்றச்சாட்டு முன்னரே கூறப்பட்டது. அப்போது அதனை கடற்படை தரப்பு முற்றாக மறுத்தது.

நாடெங்கும் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், வெலிசற கடற்படைத் தளத்தில் இருந்த கடற்படையினர் தான்.

அங்கு தொற்று ஏற்பட்டதும், 4000 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தளம் முடக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், அவ்வாறு நடந்திருந்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தொற்றாளர்கள் உருவாவதை தடுக்க முடியாமல் போயிருக்காது.

முதலாவது தொற்றாளர் கடற்படையில் கண்டுபிடிக்கப்பட்ட போது வெலிசற முகாமில் 5000 கடற்படையினர் இருந்தனர் என்று இப்போது கூறப்படுகிறது.

அங்கு தொற்றுக்குள்ளாகின்றவர்களில் பெரும்பாலானவர்கள், வெலிசற கடற்படை தளத்துக்குள் உள்ள கடற்படை பொது மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.

அதற்குள் என்ன நடக்கிறது என்பது கூட, சுகாதார அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தது.

கடற்படையினர் சுகாதார வழிகாட்டு முறைகளை பின்பற்றவில்லை என்பதை, அங்கு சென்று ஆய்வு நடத்திய நிபுணர் குழு உறுதி செய்திருக்கிறது.

அந்த நிபுணர் குழு அளித்திருக்கின்ற பரிந்துரை அறிக்கைக்கு அமையவும், சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்ட பின்னரும் தான், வெலிசற கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படையினரை வெவ்வேறு இடங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இல்லாவிட்டால் சுற்றிச் சுற்றி கொரோனா வைரஸ் அதற்குள்ளேயே புதுப்புது தொற்றாளர்களை உருவாக்கிக் கொண்டிருந்திருக்கும்.

கடற்படையினரின் பொறுப்பீனத்தினால் தான், நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அவர்களின் ஊடாகத் தான் பெரும்பாலானவர்களுக்கு தொற்று உறுதியானது. ஆனாலும், அதற்கான தண்டனையை சாதாரண மக்களே ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

தேர்தல் இந்தளவுக்கு இழுபடுவதற்கும் கூட, கடற்படையினர் மத்தியில் தீவிரமாக உள்ள தொற்றுத் தான் காரணம்.

கடற்படையினர் மத்தியில் காணப்படும் தொற்று தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போதும், அதனை அரசாங்கம் நிராகரித்தே வருகிறது,

ஆனாலும், அரசாங்கத்தினதும் கடற்படையினதும் போக்குகள், செயற்பாடுகளை அவதானிக்கும் எவரும், உண்மைகள் மறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே உணருகின்ற நிலையே காணப்படுகிறது.

இவ்வாறான சூழலில் தான், தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், தேர்தலை நடத்தக் கூடிய சூழல் உள்ளதாக சான்று கொடுத்திருக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.

இந்தக் கடிதம், உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்தின் வியூகம் என்றே கருதப்படுகிறது, இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு வெற்றி கிட்டலாம்.

ஆனாலும், கொரோனா அச்சுறுத்தலில் இருந்து அரசாங்கத்தினால் இலகுவில் வெற்றிபெற முடியாது.

அந்த சான்று கொடுக்கப்பட்ட பின்னர், ஒரே நாளில் 137, 150 பேர் என தொற்று உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்தே, இது இலகுவான விடயமாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தி நிற்கிறது.

வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படுபவர்களால் அதிகளவில் தொற்றுகள் பரவி வருகின்றன.

கடற்படையினரைப் போலவே, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது, அச்சுறுத்தல் நீங்கவில்லை என்பதையே காட்டுகிறது.

அதிலும், இலங்கையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படவில்லை. எதேச்சையாக பிசிஆர் சோதனைகளின் மூலமே அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில். தேர்தலை நடத்தும் போது, தொற்று ஆபத்து அதிகம் இருக்கும். அதனை கவனத்தில் கொள்ளாமல், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு இரட்டிப்பு மடங்கு செலவும் அரசாங்கத்துக்கு ஏற்படும்.

ஆனால் இவை எதைப் பற்றியும் அரசாங்கத்துக்கு கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

அவ்வாறான கரிசனை இருந்திருந்தால், “எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்” என்ற போக்கில் அரசாங்கம் செயற்பட்டிருக்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48