-சுபத்ரா

இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் முறைப்படியான கலந்துரையாடல்களை ஆரம்பித்த கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

எந்த முன்னறிவிப்பும் இன்றி, பெரிதாக வெளிப்படையான எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், அவரது இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கிறது.

யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குச் சென்று, பாடசாலை அதிபரைச் சந்தித்து, கிரிக்கெட் மட்டைகள், பாடசாலைப் பைகள் போன்றவற்றை அன்பளிப்புச் செய்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து, கோட்டையைச் சுற்றிப் பார்வையிட்டிருக்கிறார். மறுநாளும் அங்கேயே தங்கியிருந்து, நல்லூர் கந்தசுவாமி கோவிலையும் வெளிப்புறத்தில் இருந்து பார்வையிட்டிருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன்  வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, யாரும் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டிருந்த சூழலில், ஆலயத்தின் முகப்புப் பகுதியில் நின்று எடுத்த படத்தை வெளியிட்டிருக்கிறார்   பாகிஸதான் தூதுவர்.

இவர் தனது யாழ்ப்பாணப் பயணம் குறித்து - குறிப்பாக, சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு செய்த அன்பளிப்புகள் குறித்து  பேஸ்புக்கில் இட்ட பதிவுகளுக்கு அதிகளவான பாகிஸ்தானியர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

அவரது செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். தங்களின் நாட்டுக்கான சிறந்த பணியை ஆற்றுவதாக பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்கள்.

திடீரென - பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட இந்தப் பயணம் பலரதும், புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

அவரது பயணத்துக்கான ஒழுங்குகளை ஆளுநர் செயலகம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

ருவிட்டர் பதிவில் அதற்காக அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தூதுவராக முகமட் சாட் ஹட்டக் கடந்த ஜனவரி 15ஆம் திகதி பொறுப்பேற்றார். அதற்குப் பின்னர், ஜனவரி 20ஆம் திகதி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சான்றுப் பத்திரங்களைக் கையாளித்தார்.

அதற்குப் பிறகு, அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை, வர்த்தக சமூகத்தினரை, முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்த போதும், எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரையும் சந்திக்கவில்லை.

அவ்வாறான நிலையில், அவரது கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது குறித்து ஆச்சரியம் கொள்வது தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, முகமட் சாட் ஹட்டக்35 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  மேஜர் ஜெனரல் அதிகாரியாக இவர் இருந்தவர்.

பிரெஞ்சு இராணுவ இளநிலை அதிகாரிகள் கற்கையையும், பிரித்தானியாவில் பாதுகாப்பு புலனாய்வு பணிப்பாளர் கற்கையையும், மேற்கொண்டவர். 

அரசியல் விஞ்ஞானம், போர்க் கற்கைகளில் முதுமாணிப் பட்டமும், சர்வதேச உறவுகள் தொடர்பான முதுதத்துவமாணி பட்டமும் பெற்றுள்ளவர்.

பாகிஸ்தானில் எப்போதும, குண்டுச் சத்தங்கள் கேட்கின்ற பலுசிஸ்தானிலும், கைபர் பக்துன்வா பள்ளத்தாக்கிலும், கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்ற இவர், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிந்தனைக் குழாம்களுடன் இணைந்து இயங்கியவர்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த இவர்,  அச்சு ஊடகங்களிலும், கட்டுரைகளை எழுதி வந்தார்.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட பாகிஸ்தான் தூதுவர் இதற்கு முன்னர், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லாத  நிலையில்- எதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்தார் என்ற கேள்விக்கு சரியான விடை இல்லை.

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கத்தோலிக்க பாதிரியார்களினால் நடத்தப்படும் ஒரு பழம்பெரும், புகழ் பூத்த பாடசாலை. 

தமது நாட்டிலும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி புகழ்பெற்று விளங்குகிறது என்றும், அதனாலேயே, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை தாம் தேடி வந்ததாகவும், பாகிஸ்தான் தூதுவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானின் கராச்சியில கத்தோலிக்க பாதிரியார்களால் நடத்தப்படும் சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை மற்றும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி (பல்கலைக்கழகம்) என்பன, மிகப் புகழ்பெற்றவை.

1861இல் தொடங்கப்பட்ட இந்த சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை கராச்சியில் உள்ள இரண்டாவது பழைமையாக பாடசாலை. இதனை விடப் பழைமையானது, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி. இது  1850ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தானின் இரண்டு ஜனாதிபதிகள், இரண்டு பிரதமர்களை மத்திரமன்றி, இந்தியாவின் துணைப் பிரதமர் ஒருவரையும் உருவாக்கியது கராச்சி சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை தான்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களான  சௌகத் அசீஸ்,  மொகமட் கான் ஜூனேயோ, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிகளான ஆசிவ் அலி சர்தாரி, பர்வேஸ் முஷாரப், போன்றவர்கள்  இந்தப் பாடசாலையில் கல்வி கற்றவர்கள் தான்.

சிந்து மாகாணத்தின், நான்கு முதலமைச்சர்கள், பாகிஸ்தான் அமைச்சர்கள், போன்றவர்களை மாத்திரமன்றி, ஜாவிட் மியான்டட், டனிஸ் கனேரியா போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ர்களையும் உருவாக்கியிருக்கிறது.

அவ்வாறான ஒரு பாடசாலையின் இணைப் பாடசாலையாக கருதி, யாழ்ப்பாணத்துக்கு பாகிஸ்தான் தூதுவர் வந்திருப்பது அதிகம் ஆச்சரியமானது அல்ல.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார் அவ்வாறாயின் அவர் 2000ஆம்  ஆண்டளவில், யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

 அது விடுதலைப் புலிகளுடன் கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, பாகிஸ்தானின் இராணுவ உதவிகளை இலங்கை இராணுவம் பெற்றிருந்தது. 

யாழ்ப்பாண குடாநாட்டை புலிகளிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பெருமளவில் உதவிகளை வழங்கியது.

அதில் தற்போதைய பாகிஸ்தான் தூதுவருக்கு பங்கு இருந்ததா என்ற கேள்வியும் உள்ளது,

இவற்றுக்கு அப்பால், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முறைதான் அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது,

கொரோனா அச்சுறுத்தல் அதிகமான பகுதியாக இருந்த – கடந்த வாரமே திறந்து விடப்பட்ட கொழும்பில் இருந்து, யாழ்ப்பாணம் வந்தவர்கள், சுயதனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்த சூழலில், பாகிஸ்தான் தூதுவர் எந்த கட்டுப்பாடுகளுமின்றி யாழ்ப்பாண நகரில் நடமாடியிருக்கிறார்.

கொரோனாவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் என்று எதுவும் கிடையாது. 

இந்திய தூதுவர்  கோபால் பாக்லே கொழும்பு வந்து, இரண்டு வாரங்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே, வழக்கமான பணிகளை ஆரம்பித்தார்.

அவ்வாறான நிலையில், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்தில், சுகாதார நடைமுறைகளில் இருந்து விலக்களிப்பு பெற்றது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

அவரது பயணத்துக்கு அரசாங்க ஒத்துழைப்பு இருந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

ஏனென்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்து விட்டு, தனது மகளை அழைத்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்த, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் வீட்டுக்குச் சென்று, பொலிசாரும், சுகாதார அதிகாரிகளும், சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால், பாகிஸ்தான் தூதுவர் அரசாங்க பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, அவரைத் தனிமைப்படுத்தவோ, தடுக்கவோ யாரும் முன்வரவில்லை.

பாகிஸ்தான் தூதுவரின் இந்தப் பயணம், தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்துடன் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருந்தாலும், தமிழ் அரசியல் தரப்புகளுடன் அவர் பெரிதாக எந்த சந்திப்புகளையும் நடத்தவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

இலங்கையின் வடகுப் பகுதியில், பாகிஸ்தானின்,  நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொண்டது இல்லை.

ஏனென்றால், பாகிஸ்தானுக்கு எப்போதுமே, இன்னொரு முகம் இருப்பதாக இந்தியா உறுதியாக நம்புகிறது,

இலங்கையில் பாகிஸ்தான் தூதுவர்களாக பெரும்பாலும், இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களும், தூதுரகப் பணிகளுக்கு அமர்த்தப்படும், ஐஎஸ்ஐ எனப்படும் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும், இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதிலேயே கவனம் செலுத்துவதாக புதுடெல்லி நம்புகிறது.

இந்தியாவில், பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத செயற்பாடுகளுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்திக் கொண்டதாக  ஏற்கனவே குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் தூதுவரின் வடக்கிற்கான பயணத்தை, இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை.

மற்றொரு புறத்தில், இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட கோபால் பாக்லே, இங்கு வந்து சேர்ந்ததும்,  அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணையவழியில் கலந்துரையாடியிருந்தார்.

தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட பின்னர், அவர், முதலில் கொழும்பு கங்காராமய விகாரைக்குத் தான் சென்றிருந்தார்.

இவையெல்லாம், சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்துவதில் இந்தியத் தூதுவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்த்துகிறது.

புதிய இந்திய தூதுவர், மறைந்த ஆறுமுகன் தொண்டமானை தவிர, தமிழர் தரப்பில் வேறெவருடனும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், சந்திப்புகளை நடத்தவில்லை.

மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

பாகிஸ்தான தூதுவரின் இந்தப் பயணம் இந்தியாவை நிச்சயம் உசுப்பி விடும்.  கூடிய விரைவில் இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண பயணத்தை எதிர்பார்க்கலாம்.