இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சற்றுமுன்னர் அக்கினியுடன் சங்கமமாகியது.

நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர், அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இருந்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி  ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மக்கள் கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பொலிஸாரின் அனுமதியை பெற்றவர்கள்  இன்று  காலை முதல் உடலின் உஷ்ணத்தை அளவிட்ட பின்னர் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைகள் இடம்பெற்றன.

இதன்போது சமயத் தலைவர்கள் அன்னாரின் மறைவு தொடர்பில் இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினார்கள்.

மேலும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் விசேட இரங்கல் உரையும் இதன்போது வாசிக்கப்பட்டதோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

முன்னதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை காங்கிரஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று பிற்பகல் 2 அளவில் தகனம் செய்வதற்காக நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

கொட்டகலை, அட்டன், டிக்கோயா,நோர்வூட், நகரங்கள் உட்பட பல இடங்களிலும் வௌ்ளைக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்தை வைத்து வழிநெடுகிலும் அஞ்சலி செலுத்தி வந்த மக்கள், அவரது பூதவுடல் தாங்கி வந்த ஊர்திக்கு வீதியில் இருப்பக்கமும் இருந்து மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

வீதியின் இருபுறமும் விசேட அதிரடிபடையினர் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். பூதவுடல் தாங்கிய பேழையை வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக விசேட மேடை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிகிரியைகள் இடம்பெற்ற நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் பலத்த சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சமூக இடைவெளியை பேணும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் எவரும் மைதானத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

 சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மதகுருமார்கள் ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரத்திலுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் , மாவட்ட தலைவர்கள் ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மைதானத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பிரத்தியேக அனுமதி அட்டை விநியோகிக்கப்பட்டவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தன. இதன்படி மைதானத்துக்குள் சுமார் 500 பேர்வரை மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சுகாதார பிரிவினரால் அனைவரும்  உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டதுடன் கிருமி தொற்று நீக்கியால் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டே உட்செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நோர்வூட் மைதானத்தில் இறுதிகிரியைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு தரப்பினருக்கான  ஒத்துழைப்புகள்  தொடர்பில்  நோர்வூட்  பிரதேசசபை தலைவர் குழந்தைவேல் ரவி பொறுப்புகளை ஏற்றிருந்தார் .