(சிவலிங்கம் சிவகுமாரன்) 

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிகிரியைகள் இடம்பெற்ற நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் பலத்த சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

சமூக இடைவெளியை பேணும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் எவரும் மைதானத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

 சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மதகுருமார்கள் ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரத்திலுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் , மாவட்ட தலைவர்கள் ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மைதானத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 பிரத்தியேக அனுமதி அட்டை விநியோகிக்கப்பட்டவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 மேலும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தன. இதன்படி மைதானத்துக்குள் சுமார் 500 பேர்வரை மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

சுகாதார பிரிவினரால் அனைவரும்  உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டதுடன் கிருமி தொற்று நீக்கியால் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டே உட்செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 நோரர்வூட் மைதானத்தில் இறுதிகிரியைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு தரப்பினருக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில் நோர்வூட் பிரதேசசபை தலைவர் குழந்தைவேல் ரவி பொறுப்புகளை ஏற்றிருந்தார் .